Published : 03 Mar 2023 04:18 PM
Last Updated : 03 Mar 2023 04:18 PM
வாஷிங்டன்: “நாங்கள் போருக்கு எதிரானவர்கள். மனித உரிமைகளை அடிப்படை உரிமையாக பார்ப்பவர்கள்” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் அளித்த பேட்டி ஒன்றில், ஈரானில் மாஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து பெண்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல், உக்ரைன் போரில் ஈரானின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமிரப்துல்லாஹியன் கூறியது: “ஈரான் மனித உரிமைகளை அடிப்படை உரிமையாக பார்க்கிறது. ஈரானில் பெண்களுக்கு தேவையான அனைத்து சுதந்திரங்களும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் உள்ளன. இளம்பெண் மாஷா அமினி கண்காணிப்பு காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்தார். இந்த மரணத்தை பயன்படுத்தி ஈரான் அரசின் சட்டத்தை மாற்ற நினைத்தார்கள். மாஷா அமினிக்கு குரல் எழுப்பிய உலக நாடுகள், ஏன் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட ஷெரின் அபு அக்லேவுக்காக குரல் எழுப்பவில்லை.. இது எனக்கு மர்மமாக உள்ளது.
ட்ரோன் சர்ச்சை: நாங்கள் சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைனின் வெளியுறவுத் துறையை தொடர்புகொண்டு, எதன் அடிப்படையில் ட்ரோன்கள் ஈரானை சேர்ந்தவை என்று கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். இதுதொடர்பாக ஈரான் - உக்ரைன் ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தோம் . அப்போது கலங்கலான புகைப்படங்களை காண்பித்து இவை ஈரானை சேர்ந்த ட்ரோன்கள் என்று அவர்கள் கூறினார்கள். எங்கள் நிபுணர்களை அதனை ஆய்வு செய்ததில் இதற்கும் ஈரானுக்கு தொடர்பில்லை என்று தெரிந்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைனுடன் இரண்டாவது பேச்சுவார்த்தைக்காக நாங்கள் காத்திருந்தோம். இது குறித்து உக்ரைன் ராணுவத்தினர் தெளிவான ஆவணத்தை சமர்பிப்பார்கள் என்று காத்திருத்தோம். ஆனால், அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை.
நாங்கள் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறோம். ஈரான் எப்போதுமே போருக்கு எதிரானது. நாங்கள் உக்ரைன் மீதான போரை எதிர்க்கிறோம். ஆப்கானிஸ்தான் மீதான போரை எதிர்க்கிறோம். ஏமன், பாலஸ்தீனம் மீதான போரை எதிர்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT