மோசடி செய்த நிறுவனத்திடம் இருந்து சாட்ஜிபிடி மூலம் ரூ.9 லட்சம் வசூல் செய்த தலைமை அதிகாரி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஒட்டாவா: சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்தது.இணைய உலகில் சாட்ஜிபிடிபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் ஒரு கேள்வியை முன்வைத்தால், அதற்குரிய பதிலை உடனடியாக சாட்ஜிபிடி வழங்குகிறது.

இந்நிலையில், சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி, கனடாவில் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கிரேக் ஐசன்பெர்க் கனடாவில் வடி வமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் மற்றொரு நிறுவனத்துக்கு சேவை வழங்கியுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் அதற்குரிய பணத்தை வழங்காமல் தொடர்பைத் துண் டித்துள்ளது. இந்நிலையில் கிரேக் ஐசன்பெர்க் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி தனது நிறுவனத்துக்கு வர வேண்டிய 109,500 டாலர் (ரூ.90 லட்சம்) பணத்தை உடனடியாக பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “நாங்கள் பலகோடி மதிப்புமிக்க ஒரு நிறுவனத்துக்கு சேவை வழங்கி னோம். அந்த நிறுவனம் எங்கள் சேவைக்கான பணத்தைத் தராமல் திடீரென்று தொடர்பைத் துண்டித்துக் கொண்டது. இத்தகைய சூழலில் பொதுவாக நீதிமன்றத்தை நாடுவது வழக்கம். ஆனால், நீதிமன்றம் சென்றால் வழக்குக்காக அதிகம்செலவிட நேரிடும்.

இந்நிலையில், சாட்ஜிபிடியிடம், ‘ஒரு நிறுவனத்தின் நிதிப் பிரிவில் வேலை செய்வதாக உன்னை நினைத்துக் கொள். வாடிக்கையாளர்களிடம் இருந்து நிறுவனத்துக்கு வர வேண்டிய பணத்தை வசூலிப்பதுதான் உன் வேலை. ஒரு வாடிக்கையாளர் 109,500 டாலர் தர வேண்டும். ஆனால், 5 முறை மின்னஞ்சல் அனுப்பியும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அவரிடம் அந்தப் பணத்தை வசூலிக்க அவரைப் பயமுறுத்தும் வகையில் ஒரு கடிதம் நீ எழுத வேண்டும்’ என்று உள்ளீடு செய்தேன். இதற்கேற்ப சாட்ஜிபிடி கடிதம் எழுதித் தந்தது. அதில் ஒரு சில திருத்தங்கள் மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பினேன்.

ஆச்சர்யமூட்டும் விதமாக, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியிடமிருந்து உடனே பதில் வந்தது. சீக்கிரமே உரிய தொகையைத் தந்துவிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வக்கீல் செலவு எதுவும் இல்லாமல், சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி எங்கள் நிறுவனத்துக்கு வர வேண்டிய பணத்தை பெற்று விட்டேன்” என்று கிரேக் ஐசன் பெர்க் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in