Published : 26 Feb 2023 06:12 AM
Last Updated : 26 Feb 2023 06:12 AM

உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அஜய் பங்கா

வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பஸ் பதவிக் காலம் 2024 ஏப்ரல் வரை உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் பதவி விலகப் போவதாக மால்பஸ் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து வரும் மே மாதம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், உலக வங்கியின் புதிய தலைவராக இந்தியரான அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த நியமனத்துக்கு உலக வங்கியின் இயக்குநர்கள் வாரியம் ஒப்புதல் அளித்துவிட்டால், உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமை அஜய் பங்காவுக்கு கிடைக்கும்.

காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் அஜய் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்றும் உலக வங்கியை திறமையாக நிர்வகிப்பார் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டி உள்ளார். உலகில் மிகவும் திறமை வாய்ந்த நபர்களில் இவரும் ஒருவர் ஆவார். 187 நாடுகளின் குழுமமான உலக வங்கி, வளரும் நாடுகளின் வறுமையை ஒழிப்பது தொடர்பான திட்டங்களுக்கு கடன் வழங்கி வருகிறது.

ஒரு நாள் ஊதியம் ரூ.52.6 லட்சம்: கடந்த 1981-ல் நெஸ்லே இந்தியா நிறுவனத்தில் தனது பணியை தொடங்கினார் அஜய் பங்கா. 13 ஆண்டுகள் அங்கு பணியாற்றி அவர், பெப்சிகோ நிறுவனத்தில் இணைந்தார். பின்னர் சிட்டி குழுமத்தில் பணியாற்றிய அஜய், நெதர்லாந்தின் ‘எக்சோர்’ என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

கடைசியாக மாஸ்டர் கார்டு நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய அஜய், 2021-ம் ஆண்டு ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போது அவருடைய ஒரு நாள் ஊதியம் ரூ.52.6 லட்சம் ஆகும். ஆண்டு வருமானம் ரூ.192 கோடி ஆகும். இப்போது ஜெனரல் அட்லான்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பங்கா உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் அஜய் பங்காவின் சொத்து மதிப்பு ரூ.1,700 கோடியாக இருந்தது என கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரைச் சேர்ந்தவர் அஜய் பங்கா. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பஜன் பங்காவின் மகன்தான் அஜய். ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் படித்த இவர், டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தார். பின்னர் அகமதாபாத் ஐஐஎம்-மில் நிர்வாகவியலில் முதுகலை பட்டம் பெற்றார். இந்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அஜய் பங்காவுக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்தது.

உலக வங்கியின் தலைமை பொருளாதார அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தர்மீட் கில் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x