

இலங்கைப் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இலங்கை கிரிக்கெட் அணியின் உலகப் புகழ்பெற்ற நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.
இந்தத் தகவலை, மத்திய மாகாண சபை உறுப்பினர் குமார தஸநாயக்க கண்டியில் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.
இந்த நிலையில், முத்தையா முரளிதரன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் எனது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது.
அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் தற்போது அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன்.
என்னை தமிழராகவோ, இந்துவாகவோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது. இதன் காரணமாகவே சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டுக்களின்போது அரசின் சார்பில் குரல் கொடுத்தேன். இது தவிர அரசுடன் வேறு எந்தக் கூட்டணியும் கிடையாது.
பல கட்சிகளுடனும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்ற போதிலும், எவரும் அரசியலில் ஈடுபடுமாறு அழைக்கவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அரசியல் களமிறங்கும் நோக்கம் எதுவும் கிடையாது" என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.