

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரான ஜலாலாபாத் நகரில் அமைந்துள்ள தேசிய தொலைக்காட்சி கட்டிடத்தை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அம்மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "துப்பாக்கி ஏந்திய நபர்கள் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் நுழைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? - ஆகியவை குறித்து இதுவரை அறியப்படவில்லை. குறைந்தபட்சம் 3 நபர்கள் கட்டிடத்துக்குள் இருக்கிறார்கள்.அவர்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் தொடர்ந்து பாதுகாவலர்களிடம் சண்டையிட்டு வருகிறார்" என்றார்.
தொலைக்காட்சி நிலையத்தைச் சுற்றி பயங்கரமான துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்பதாக ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜலாலாபாத் பகுதி பாகிஸ்தானின் எல்லையோரத்தில் அமைந்துள்ள தாலிபன்கள், ஐஎஸ் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.