

தென்சீனக் கடல் பகுதியில் பறந்த அமெரிக்க உளவு விமானத்தை சீன போர் விமானங்கள் இடைமறித்து விரட்டியுள்ளன.
தென்சீனக் கடலில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவுக்கு மிக அருகில் கடந்த 24-ம் தேதி அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். டெவ்வி என்ற போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. இதற்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து தென் சீனக் கடல் பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை சீன ராணுவம் குவித்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஹாங்காங்கின் தென் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் தென்சீனக் கடலில் பறந்த அமெரிக்க கடற்படையின் உளவு விமானத்தை சீன விமானப் படையின் 2 போர் விமானங்கள் வழிமறித்துள்ளன.
இதுகுறித்து சீன பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரென் கூறியபோது, சீன கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற அமெரிக்க உளவு விமானத்தை வழிமறித்து விரட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவ வட்டாரங் கள் கூறியபோது, சர்வதேச சட்டங் களை மீறி சீனா செயல்படுகிறது. எங்களது விமானம் சர்வதேச எல்லையில் பறந்தது. அதனை சீன போர் விமானங்கள் இடைமறித் துள்ளன. இதுதொடர்பாக எங்களது கண்டனத்தை சீன தரப்பிடம் பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தன.