Published : 07 May 2017 05:28 PM
Last Updated : 07 May 2017 05:28 PM

நைஜீரியாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகள் கடத்திய 82 மாணவிகள் மீட்பு

நைஜீரியாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகள் கடத்திச் சென்ற மாணவிகளில் 82 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 2014 ஏப்ரலில் சிக்போக் நகர அரசு பள்ளியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்றனர். அவர்களில் 57 மாணவிகள் தப்பியோடி வந்துவிட்டனர்.

கடத்தப்பட்ட மற்ற மாணவிகளை மீட்க அந்த நாட்டு அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. இதுதொடர்பாக தீவிரவாதிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போகோஹாரம் மூத்த தளபதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக 82 மாணவிகளை தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். அவர்கள் அனைவரும் அரசு படைகளிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று தலைநகர் அபுஜா அழைத்து வரப்பட்டனர்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட மாணவிகளை அதிபர் முகமது புஹாரி நேரில் சந்தித்துப் பேசினார். மாணவிகளின் விடுதலைக்கு உதவிய சுவிட்சர்லாந்து அரசு மற்று செஞ்சிலுவை சங்கத்துக்கு அதிபர் நன்றி தெரிவித்தார்.

போகோஹாரம் தீவிரவாதிகள் பிடியில் உள்ள இதர மாணவிகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் முகமது புஹாரி உறுதி அளித்தார்.

நைஜீரியாவில் கடந்த 2009 முதல் போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 23 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளை கடத்திச் சென்றுள்ள தீவிரவாதிகள், அவர்களை பாலியல் அடிமைகளாக நடத்துவதாக தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x