

சிரிய அரசுப்படையின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் குறித்து பெயர் குறிப்பிடப்படாத சிரிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "சிரிய - ஜோர்டான் எல்லையோரத்தில் அரசு கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள சிரிய படை வீரர்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ராணுவத் தளங்களிலும் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போர் நடைபெறும் நாட்டில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. சிரியாவை ஆக்கிரமிக்கும் எந்த ஒரு முயற்சியையும் சிரிய ராணுவம் அனுமதிக்காது" என்றார்.
முன்னதாக அமெரிக்க படைகள் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கிறோம் என்று சிரியாவில் ஐஎஸ் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்தது. இதில் ஏராளமான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்தது. எனினும் அமெரிக்கா படைகள் சிரியாவில் அவ்வப்போது இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருவது குறிப்ப்பிடத்தக்கது.