

ஜெர்மனி சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லை பெர்லினில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்ட மாக நேற்று முன்தினம் அவர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார்.
அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப் போது சைபர் குற்றம், ரயில்வே பாதுகாப்பு, நகர்ப்புற வளர்ச்சி, திறன் மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா, கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இருநாட்டு பிரதமர் களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகளால் ஜெர்மனியுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஞ்சலா மெர்க்கல் கூறியபோது, இனிமேல் அமெரிக்காவை சார்ந்து இருக்கப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். எனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் ஜெர்மனி தனது உறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. மேலும் தென் சீனக் கடல், இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு எதிரான வியூகங்கள் குறித்தும் மோடியும் ஏஞ்சலா மெர்க்கலும் ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோடியுடன் பிரியங்கா சந்திப்பு
பாலிவுட் நடிகை பிரியங் கா சோப்ரா, ‘பே வாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள் ளார். அந்த படத்தின் விளம்பரத் துக்காக அவர் தற்போது பெர்லினில் முகாமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் நேற்று காலை சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பிரியங்கா வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியப் பிரதமர் பெர்லினில் பயணம் மேற்கொள்ளும்போது நானும் பெர்லினில் தங்கியிருப்பது தற்செயலான சம்பவம். தொடர் அலுவல்களுக்கு மத்தியில் என்னை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.