

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலில் வெளிநாட்டுத் தூதரக கட்டிடத்துக்கு அருகே நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பலியாகினர்
இந்தத் தாக்குதல் குறித்து காபூல் போலீஸின் செய்தித் தொடர்பாளர் பஷிர் மஜித் கூறும்போது, "காபூலிலில் இன்று(புதன்கிழமை) ஜெர்மன் தூதரக கட்டிடத்தின் நுழைவாயிலில் கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் யாரை குறி வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்று தற்போது கூறமுடியாது. இந்த குண்டுவெடிப்பில் 80 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" என்றார்.
குண்டுவெடிப்பு காரணமாக அப்பகுதியிலிருந்த கட்டிடங்கள், ஜன்னல்கள் குலுங்கியதாக ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, எனினும் இந்தத் தாக்குதலை தாலிபன்கள் நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்திய தூதரகத்துக்கு பாதிப்பு இல்லை
காபூல் கார் குண்டுவெடிப்பு தாக்குதலில், "இந்திய தூதரக அலுவலகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை, இந்திய அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
மோடி கண்டனம்
காபூல் வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததுடன், ஆப்கனுக்கு இந்தியா துணை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.