

அமெரிக்கா உலகின் முக்கியமான நாடுகளை வேவு பார்த்து வரும் போக்கு கடும் எதிர்ப்புகளைக் கிளப்பிய நிலையில் தற்போது ஜெர்மனி இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெர்மனியில் அமெரிக்க முக்கிய உளவு அதிகாரி ஒருவர் நேற்று வெளியேற்றப்பட்டார். ஜெர்மனி உளவு அமைப்பில் பணியாற்றி வரும் ஒருவரும் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வரும் ஒரு நபரும் முக்கியமான ஆவணம் ஒன்றை அமெரிக்காவிடம் அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூறும்போது, "எல்லாவற்றிற்கும் மேலாக வேவு பார்க்கும் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது என்ற உத்தரவாதம் எங்களுக்கு அமெரிக்காவிடமிருந்து கட்டாயம் வேண்டும்” என்றார்.
அமெரிக்க அதிகாரிகளுடன் அதிகம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஜெர்மனி அரசு, தன் நாட்டு உளவு அமைப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஜெர்மனி வணிக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பு, வேவு பார்ப்பது தொடர்ந்து நீடிக்குமேயானால் அமெரிக்காவில் ஜெர்மனியின் முதலீடு நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.