Published : 11 Feb 2023 10:11 AM
Last Updated : 11 Feb 2023 10:11 AM
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது 40 ஆயிரம் அடி உயரத்தில் ஏதோ மர்ம பொருள் ஒன்று பறக்க அதனை அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் மீது பறந்த சீன உளவு விமானம் சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இன்னொரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, "அந்த மர்ம பொருள் எங்கிருந்து வந்தது. அதன் நோக்கம் என்னவென்றெல்லாம் எங்களுக்கு இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பது விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என்பதால் அதனை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம். அதிபர் ஜோ பைடன் உத்தவின் பேரில் நாங்கள் அதனை சுட்டு வீழ்த்தினோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன உளவு பலூனைவிட இது அளவில் சிறியதுதான். இது ஒரு காரின் அளவில் தான் இருந்தது. இது அரசுக்கு சொந்தமானதா அல்லது ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சொந்தமானதா? அதன் நோக்கம் தான் என்னவென்பது இன்னும் உறுதியாகவில்லை" என்றார்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித்தொடர்பாளர் ப்ரிகேடியர் ஜெனரல் பேட் ரைடர் இது குறித்து கூறுகையில், "F-22 ரேப்டர் ரக ஜெட் கொண்டு AIM-9X ஏவுகணையை ஏவி அந்த மர்மப் பொருளை வீழ்த்தினோம். முன்னதாக சீன உளவு பலூனை வீழ்த்தவும் இதே ஜெட் விமானமும், ஏவுகணையும் தான் பயன்படுத்தப்பட்டது" என்றார்.
வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் வடக்கு அலாஸ்காவில் கனடா நாட்டு எல்லையை ஒட்டி உறைண்ட நீர் நிலை மீது விழுந்தது. அதனால் வீழ்ந்த பாகங்களை மீட்பது எங்களுக்கு எளிதாகியுள்ளது என்று ராணுவ தரப்பு கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT