தப்பிய குடும்பம், இடிபாடுகளில் பிறந்த குழந்தை - சிரியா பூகம்ப மீட்புப் பணிகளும் சில நம்பிக்கைத் துளிகளும்

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி
Updated on
1 min read

டமஸ்கஸ்: சிரியாவில் பூகம்பத்தினால் சரிந்த கட்டிடங்களுக்கு இடையே ஒரு குடும்பமே மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிரிய பாதுகாப்புப் படையினர் கூறும்போது, “வடக்கு இட்லிப் பகுதியில் உள்ள பிஸ்னியா கிராமத்தில் பூகம்பத்தினால் சரிந்த கட்டிங்களுக்கு இடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் என அனைவரும் மீட்கப்பட்டனர்” என்று தெரிவித்தனர்.

பாதுகாப்புப் படையினரால் அந்தக் குடும்பத்தினர் மீட்கப்படும்போது சுற்றி இருந்த மக்கள் ஆரவாரம் குரல் எழுப்பி வரவேற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

இடிபாடுகளில் பிறந்த குழந்தை: சிரியாவின் ஜிண்டெரிஸ் பகுதியில் இடிபாடுகளுக்குள் பிறந்த பெண் குழந்தை மீட்கப்பட்டது. ஆனால், அக்குழந்தையின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்தனர் என்பது பெரும் சோகம்.

சிரியாவில் திங்கள்கிழமை காலை பூகம்பம் ஏற்பட்டபோது தம்பதிகளும், அவர்களது நான்கு குழந்தைகளும் தங்கள் அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், கட்டிடம் அவர்கள் மீது இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் பெண்ணின் உடல் அருகே பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. அப்பெண் இறக்கும் தருவாயில் இக்குழந்தையை பிரசவித்திருக்கலாம் என மீட்பு குழுவினர் நம்புகின்றனர். அக்குழந்தை பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த பூகம்பம் துருக்கி - சிரிய மக்களை பேரழிவில் ஆழ்த்தியிருந்தாலும், மீட்கப்படும் உயிர்கள் அங்காங்கே நம்பிக்கையை விதைத்து வருகிறது என்றால் அது மிகையல்ல!

துருக்கி - சிரியா எல்லையில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த பூகம்பத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,000 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

துருக்கி - சிரியாவுக்கு அமெரிக்கா , தைவான், இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in