

மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ரஷ்யா ஆயுதங்கள் வழங்கியதற்கான ஆதாரங்களை எளிதில் அளிக்க முடியும் என்று உக்ரைன் அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
298 அப்பாவி உயிர்களை பலி கொண்ட அந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணையை ரஷ்யாவே அளித்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவும், பிரிவினைவாத போராளிகளும் மீட்புப் படையினரை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திற்கருகே செல்ல விடாமல் செய்து சாட்சியங்களை அழிக்கப்பார்க்கின்றனர் என்று உக்ரைன் மேலும் கடுமையாகச் சாடியுள்ளது.
விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட 3 மணி நேரத்தில் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பயன்பட்டக் கருவி ரஷ்யாவுக்குச் சென்று விட்டது என்றும் உக்ரைன் சாடியுள்ளது.
இது குறித்து உக்ரைன் நாட்டின் உளவு அமைப்பின் தலைவர் வைடாலி நாய்டா புகைப்படங்களைக் காண்பித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
ரஷ்ய எல்லையில் பக்-1 ஏவுகணைத் தாங்கிகள் 3 நின்று கொண்டிருந்த படத்தையும் அவர் காண்பித்துள்ளார்.
மேலும், ஏவுகணை ஸ்னீஸ்னே என்ற இடத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. இந்த நகரம் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் உக்ரைன் படைகளுக்கும், பிரிவினைவாத படைகளுக்கும் இடையே சண்டை அதிகம் நடக்கும் இடமாகவும் அது அமைந்துள்ளது.
உக்ரைன் அரசு சர்வதேச விசாரணைத் தேவை என்று வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாதான் இந்த விமானத் துயரத்திற்குக் காரணம், ஆனால் அது தன் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைக்கிறது என்கிறது உக்ரைன் அரசு.
கடைசியாக வந்த தகவல்களின் படி, ஐரோப்பாவில் கூட்டுறவு மற்றும் பாதுகாப்பு என்ற அமைப்பின் கண்காணிப்பாளர்கள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் அப்பகுதிக்குச் செல்ல அனுமதி கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் எவ்வளவு நேரம் அவர்கள் அங்கு இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.