

அமெரிக்காவின் பெர்க்லி சட்டக் கல்லூரியின் முதல்வர் (டீன்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஜித் சவுத்ரி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் சட்டக் கல்லூரி டீனாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
சர்வதேச அரசியல் சாசன சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவரான சவுத்ரி டெல்லியில் பிறந்தவர். 44-வயதாகும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார். கடந்த மே மாதம் இப்பதவிக்கு சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இது வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்று கூறியுள்ளார் நியூயார்க் சட்ட பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சவுத்ரி பணியாற்றியுள்ளார்.
எகிப்து, ஜோர்டான், லிபியா, டுனிசியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் அரசியல் சாசன சட்ட மறுவடிவாக்கத்தில் முக்கியப் பணியாற்றியுள்ளார். உலக வங்கியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.