

வங்கக் கடலில் உருவான மோரா புயல் வங்கதேச கடற்கரை பகுதி யில் நேற்று காலையில் கரையைக் கடந்தது. இதனால், மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மரங்கள் மற்றும் கட்டிடம் இடிந்ததில் 6 பேர் பலியாயினர்.
இலங்கையில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் ஏற் பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 180-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதையடுத்து வங்கக் கடலில் மோரா புயல் உருவானது.
இது வங்கதேசத்தின் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் இடையே நேற்று காலை 6 மணி அளவில் கரையைக் கடந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காக்ஸ் பஜார் பகுதி வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி ஏ.கே.எம். நஸ்முல் ஹக் கூறும்போது, “மோரா புயல் கரையைக் கடந்ததையடுத்து கடற்கரையோர மாவட்டங்களில் கடும் சூறைக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. செயின்ட் மார்டின்ஸ் தீவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்திலும் காக்ஸ் பஜார் பகுதியில் மணிக்கு 150 கி.மீ. வேகத் திலும் காற்று வீசிகிறது” என்றார்.
காக்ஸ் பஜார் மற்றும் ரங்கமதி பகுதியில் மரங்கள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தப் புயல் காரணமாக, சிட்ட காங் சர்வதேச விமான நிலையம் மற்றும் காக்ஸ் பஜார் விமான நிலையங்களில் விமான புறப்பாடு மற்றும் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏராள மான வீடுகள் சேதமடைந்துள்ளன.
கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக 4 முதல் 5 அடி உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர் கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 10 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப் பான இடங்களில் தங்கவைக்கப்பட் டனர். அவர்களுக்கு அத்தியா வசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அணுசக்தி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரியா தலைநகர் வியன்னா சென்றுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அங்கிருந்தபடியே நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் இந்தப் புயல் தொடர்ந்து வடக்கு-வடகிழக்காக நகர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நோக்கிச் சென்று வலுவிழந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒடிசா மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அந்த மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.