சிரிய மக்களை பெருந்துயரில் தள்ளிய நிலநடுக்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

டமஸ்கஸ்: துருக்கி - சிரிய எல்லையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,000 -ஐ கடந்துள்ளது. இந்த நிலநடுக்கம் இரு நாட்டு மக்களையும் துயரில் ஆழ்த்தி இருக்கிறது.

உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த சிரியா, மெல்ல மீண்டு கொண்டிருந்த நிலையில், அந்நாட்டு மக்களை இந்த நிலநடுக்கம் மீண்டும் பெருந்துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது

இந்த நிலநடுக்கத்திற்கு சிரியாவில் மட்டும் 1,444 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போரினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த சிரியாவின் வடக்குப் பகுதி மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மிகுந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நார்வே அகதிகள் அமைப்பு கூறும்போது, “உள்நாட்டுப் போரினால் உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவானைவாதிகளுக்கும் இடையே கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த போர் 2021 ஆம் ஆண்டுதான் மெல்ல தணிந்தது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. எனினும் வடக்குப் பகுதிகளில் சில இன்னமும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. போர் காரணமாக இப்பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள் அகதிகளாக கூடாரம் அமைத்து வாழ்த்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in