லிஸ் ட்ரஸ் | கோப்புப் படம்
லிஸ் ட்ரஸ் | கோப்புப் படம்

ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டங்கள் பிரிட்டனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்

Published on

லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய லிஸ் ட்ரஸ், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டத்தை விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில், பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியில் லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பதவியேற்று 47 நாட்களிலேயே தனது பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தனது ராஜினாமாவுக்குப் பிறகு முதல் முறையாக பொதுவெளியில் லிஸ் ட்ரஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தித்தாளில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது, "சக்திவாய்ந்த இடது சாரி நிர்வாகத்தால் நான் பிரதமர் பதவியிலிருந்து இறக்கப்பட்டேன். சர்வதேச அளவிலும் எனக்கு நெருக்கடிகள் இருந்தது.எனக்கு ஆதரவு குறைவாக இருந்ததால் எனது கொள்கைகளை என்னால் செயல்படுத்த முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த கட்டுரை பதிவில், தற்போதைய பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக்கின் வரி விதிப்பு கொள்கையையும் அவர் கடினமாக விமர்சித்துள்ளார்.

கார்ப்பரேஷன் வரியை 19 முதல் 25 சதவீதமாக உயர்த்தும் சுனக்கின் முடிவு பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் லிஸ் ட்ரஸ் விமர்சித்தார்.

முன்னதாக பிரிட்டனில் ஓய்வூதியம், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள், ரயில் ஓட்டுநர்கள், விமான பணியாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், அரசு ஊழியர்கள் என 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் கடந்த வாரம் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவற்றின் நிறைவேற்றுவதற்கான செயல் திட்டத்தில் பிரிட்டன் அரசு இறங்க வேண்டிய தேவை உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in