Published : 02 Feb 2023 04:54 PM
Last Updated : 02 Feb 2023 04:54 PM

உக்ரைன் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்: ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்

கோன்ஸ்டான்டின் எஃப்ரெமோவ்

கீவ்: “போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கோன்ஸ்டான்டின் எஃப்ரெமோவ் என்ற ராணுவ வீரர், ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாக உக்ரைனில் போரிட்டவர். தற்போது அவர் போர்க்களத்திலிருந்து விலகியுள்ளார். அவரை துரோகி என்று ரஷ்யா அடையாளப்படுத்துகிறது.

இந்த நிலையில், பிபிசி-க்கு கோன்ஸ்டான்டின் அளித்த நேர்காணலில் கோன்ஸ்டாண்டி பேசும்போது, “போரில் உக்ரைன் ஆண்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். இந்தக் கொடுமைகள் வாரம் முழுவதும் நடக்கும். தினந்தோறும் உக்ரைன் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

உண்மையைக் கூற வேண்டும் என்றால், எங்களில் பலருக்கு இது போர் என்றே தெரியவில்லை. நாங்கள் பயிற்சி என்றுதான் முதலில் நினைத்தோம். இதில் எனக்கு விருப்பமில்லை. நான் வெளியேற முடிவு செய்தேன். நான், எனது படைத் தளபதியிடம் சென்று எனது நிலையை விளக்கினேன். அவர் என்னை ‘துரோகி , கோழை’ என்று விமர்சித்து மூத்த அதிகாரிகளிடன் அழைத்துச் சென்றார்.

அதன் பின்னர் நான் எனது ஆயுதங்களை விட்டுவிட்டு, ஒரு டாக்ஸியில் ஏறி புறப்பட்டேன். பின்னர் செச்சினியாவில் உள்ள எனது தளத்திற்குத் திரும்பி வந்து அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்ய விரும்பினேன். ஆனால், என் நண்பர்கள் என்னை எச்சரித்தனர். ஒரு கர்னல் என்னைத் தப்பியோடியதற்காக 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைப்பேன் என்று கூறினார்” என்று அந்தப் பேட்டியில் கோன்ஸ்டான்டின் கூறியுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர் : அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x