

தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து பல செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உலகைப் பாதித்து வரும் பல பிரச்சினைகளில் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நிலைப்பாடுகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் இடம் பெறுவதாகத் தெரிய வில்லை. என்ன செய்கிறார் ஒபாமா?
மிகவும் பிஸியாக இருக்கிறார். அதிபராக இருந்தபோது சம்பாதித் ததைவிட இப்போது அவர் மிக அதிகமாகச் சம்பாதிக்கிறார் என்பதால் விமர்சனங்களும் எழுந் துள்ளன. 2016-ல் அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு மசோதாவை இயற்றியது. முன்னாள் அதிபர் களின் ஓய்வூதியம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்றும் அதற்கு ஒரு உச்சபட்ச தொகையை தீர்மானிக்க வேண்டும் என்றும் அந்த மசோதா குறிப்பிட்டது. ஆனால் தனது வீட்டோ அதிகாரத் தைப் பயன்படுத்தி அதை நிறைவேறாமல் செய்துவிட்டார் ஒபாமா.
பாம் ஸ்பிரிங்ஸ் என்ற பகுதியிலுள்ள வீட்டில் குடியிருக் கிறார் ஒபாமா. வாஷிங்டனில் இவருக்கென்று 8,200 சதுர அடி உள்ள வீடு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டிருக்கிறார்.
ஒபாமாவின் தற்போதைய ஓய்வூதியத் தொகை ஆண்டுக்கு 2 லட்சம் டாலர். அதனாலென்ன என்பவர்களைக்கூட அடுத்து வரும் தகவல்கள் மிரள வைக்கலாம். ஒரு தொலைக்காட்சிக்கான 90 நிமிடப் பேட்டிக்கு 4 லட்சம் டாலர் பெற்றிருக்கிறார் ஒபாமா. அங்கு அவர் பேசியது அமெரிக்கப் பொருளாதாரம் குறித்து.
முதலீட்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு ஒரு மணி நேரத்துக்கு உரையாற்ற 4 லட்சம் டாலர் கட்டணம் பெற்றிருக்கிறார்.
தனது வாழ்க்கையைப் பற்றி ஒரு நூலை எழுதவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார் ஒபாமா. இதற்காக அவருக்கு 20 மில்லியன் டாலர் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மனைவி மிஷேல் ஒபாமா தன் சுயசரிதையை எழுதினால் அதற்கும் அதே அளவு தொகை அளிக்கப்பட வாய்ப்பு உண்டு. இவையெல்லாம் தொடக்க ஒப்பந்தத் தொகைதான். மற்றபடி ராயல்டி தொகை என்பது வெள்ளமாக வந்து சேரும் (ஏற்கெனவே ஒபாமா இரு நூல்களை எழுதியிருக்கிறார் - The Audacity of Hope, Dreams of my father. இவற்றின் ராயல்டியே ஆண்டுக்கு சுமார் 60,000 டாலர் என்கிற கணக்கில் வருகிறதாம்).
இந்த விஷயத்தில் முன்பு ஒருமுறை ஹிலாரி கிளிண்டன் கூறிய கருத்து குறிப்பிடத்தக்கது. “வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியபோது நாங்கள் கடனாளிகளாக இருந்தோம். அதற்குப் பிறகுதான் பெருந் தொகை சேர்ந்தது” என்றார்.
“அதிபர் காலத்துக்குப் பிறகு குழந்தைகளுடன் சேர்ந்து சமூக சேவை செய்வதையே நான் விரும்புகிறேன்” என்று ஒபாமாவே கூறியுள்ளார். ஆனால் அப்படி அவர் கூறியது 2012-ல்.
அதிபராக இருந்தபோது அடிக்கடி பெரும் வங்கிகளை விமர்சித்தவர் ஒபாமா. பணக்காரர்கள்-ஏழைகளிடையே உள்ள இடைவெளியை இவை அதிகரிக்கின்றன என்றவர். ஒவ்வொரு அமெரிக்கனும் பொருளாதாரத்தில் சம நிலை பெற வேண்டும். அதுதான் இன்றைய பெரும் சவால் என்றவர்.
“சேவையைக் குறிக்கோளாகக் கொண்ட வாழ்க்கையை மேற் கொள்ள விடாமல் இளைஞர்களை சில தடைக்கற்கள் தடுக்கின்றன. அந்தத் தடைக்கற்களை நீக்க வழிகள் உண்டா என்று பார்க்க வேண்டும். அப்படி நீக்கி விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று சமீபத்தில் அவர் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடியதைக் கோபமாகவும் கிண்டலாகவும் சிலர் நோக்குகிறார்கள்.