ஜிகாத் பெயரில் தீவிரவாதத்தை பரப்புகிறார்: ஹபீஸ் சயீத் மீது பாக். குற்றச்சாட்டு

ஜிகாத் பெயரில் தீவிரவாதத்தை பரப்புகிறார்: ஹபீஸ் சயீத் மீது பாக். குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஜிகாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் பரப்பி வருகிறார் என்று அந்நாடு கூறியுள்ளது.

மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜமாத் உத்தவா தலைவர் ஹபீஸ் சயீத் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவருடன் அவரது சகாக்கள் 4 பேரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹபீஸ் சயீத் தரப்பில் நீதிமன்றத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு சனிக்கிழமையன்று நீதிபதிகள் இஜாஸ் அப்சல் கான், அயிஷா ஏ மாலிக், ஜமல் கான் மண்டோகயில் ஆகியோர் அடங்கிய நீதிக் குழுவின் முன் விசாரணைக்கு வந்தது.

ஹபீஸ் சயித் தரப்பில், "காஷ்மீரிகளுக்கு ஆதரவான எனது போராட்டங்களை தடுக்கவே அரசு என்னை கைது செய்துள்ளது" என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், "ஹபீஸ் சயித் ஜிகாத் (புனித போர்) என்ற பெயரில் பாகிஸ்தானில் தீவிரவாதத்தைப் பரப்புகிறார். சயீத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியதன் விளைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது ஹபீஸ் சயீத் மற்றும் அவருடைய சகாக்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் அடங்கிய ஆவணத்தை நீதிமன்ற குழுவிடம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.

ஹபீஸ் சயீத் கைதுக்கு எதிரான விசாரணையின் போது அவரது ஆதரவாளர்கள் பலர் நீதிமன்ற வளாகத்தில் வெளியே நின்று கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in