

ரஷ்யாவுடன் தான் தொடர்ப்பு வைத்து கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிளின் ரஷ்யாவால் மிரட்டப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் சாலி யேட்ஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சாலி யேட்ஸ் அகதிகள் தடை குறித்த டர்ம்ப் உத்தரவுக்கு ஆதரவளிக்காததால் கடந்த ஜனவரி மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ட்ரமப் நிர்வாகத்தின் மீது அவ்வப்போது அவர் எதிர்மறை கருத்துகளை கூறிவருகிறார்.
இந்த நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்காவில் உள்ள போலி ஊடகங்களுக்கு கூட சாலி யேட்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று நன்கு தெரியும். சாலி யேட்ஸின் செய்திகள் போலி ஊடங்களை கூட மகிழ்ச்சியடைய செய்யவில்லை. ஊடகங்களுக்கே தெரியும் இது பழைய செய்தி என்று. எனக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதரமும் இல்லை.
டர்ம்ப் - ரஷ்யா தொடர்பான அனைத்து கதைகளும் புரளியே. எப்போது இதனை நிறுத்தப்போகிறார்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்பினால் ஒபாமாவின் ஆட்சியை தொடர்ந்து விமர்சித்த மைக்கல் பிளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் டர்ம்ப் அதிபர் பதவியை ஏற்பதற்கு முன்பாகவே மைக்கல் பிளின் ரஷ்ய தூதர்களுடன் அமெரிக்கா ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை நீக்குவது குறித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கைகள் வலுவடைந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆலோசகராக நியமிட்ட முன்று வாரத்திலேயே பதவியை ராஜினாமா செய்தார் மைக்கல் பிளின்.
மேலும், ட்ரம்ப் அமெரிக்க அதிபராவதற்கு தேர்தலில் ரஷ்யா மறைமுகமாக உதவியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.