

அமெரிக்கா வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்துள்ள அழைப்பை ரத்து செய்யுமாறு நியூயார்க்கில் செயல்படும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஒரு லட்சம் கையெழுத்துகளைப் பெற்று ஆன்-லைன் மூலம் அதிபர் ஒபாமாவுக்கு மனு அனுப்ப அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
“2002-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ராவில் ரயில் எரிப்புச் சம்பவமும், அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மதக்கலவரமும் ஏற்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்ய வேண்டும்.
சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 1984-ம் ஆண்டு சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலில் ராணுவத் தாக்குதல் நடத்த மத்திய அரசை பாஜக தூண்டியது. 2008-ல் ஒடிஷா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலை பாஜக மேற்கொண்டது” என்று சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு சார்பில் ஆன்-லைன் மூலம் வெள்ளை மாளிகைக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள ஒபாமா, அவருடன் வரும் செப்டம்பர் 30-ம் தேதி பேச்சு நடத்துவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார் என மத்திய அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், மோடிக்கு எதிராக சீக்கிய அமைப்பு களம் இறங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் வெள்ளை மாளிகையின் கவனத்தைப் பெற, தனது மனுவில் ஒரு லட்சம் பேரின் கையெழுத்துகளை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் சீக்கிய அமைப்பு பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.