துப்பாக்கி முனையில் பாக். இளைஞர் திருமணம் செய்ததாகப் புகார்: நாடு திரும்ப இந்தியப் பெண்ணுக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் அனுமதி

துப்பாக்கி முனையில் பாக். இளைஞர் திருமணம் செய்ததாகப் புகார்: நாடு திரும்ப இந்தியப் பெண்ணுக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

வாகா எல்லை வரை பாதுகாப்பு தரவும் உத்தரவு

தன்னைத் துப்பாக்கி முனையில் பாகிஸ்தான் இளைஞர் திருமண செய்ததாகக் கூறிய இந்தியப் பெண்ணை, பாதுகாப்புடன் நாடு திரும்ப இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் உஸ்மா. இவரும், பாகிஸ் தானைச் சேர்ந்த தாகிர் அலியும் காதலித்துள்ளனர். மலேசியாவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த மே 1-ம் தேதி வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்ற உஸ்மாவுக்கும், தாகிருக்கும் கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், தன்னைத் துப்பாக்கி முனையில் மிரட்டித் திருமணம் செய்ததாகவும், தன்னை இந்தியா செல்ல அனுமதிக்குமாறும் கோரி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உஸ்மா தஞ்சம் புகுந்தார்.

இதனைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த உஸ்மா, தன்னைத் துப்பாக்கி முனையில் தாகிர் அலி திருமணம் செய்ததாகவும், இந்தியா திரும்பிச் செல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், தலசீமா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூறி, அதற்கான மருத்துவ அறிக்கையையும் நீதிமன்றத்தில் உஸ்மா கடந்த 12-ம் தேதி தாக்கல் செய்தார்.

இதையடுத்து, நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி மொசின் அக்தர் கியானி, இந்தியா செல்ல உஸ்மாவுக்கு அனுமதி வழங்கியதுடன், வாகா எல்லை வரை போலீஸார் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். முன்னதாக, தாகிர் அலி தனது மனைவியைப் பார்க்க நீதிபதியிடம் அனுமதி கோரினார்.

ஆனால், கணவரைப் பார்க்க விரும்பவில்லை என உஸ்மா மறுத்துவிட்டார். இதனை அந் நாட்டின் ‘டான்’ பத்திரிகை செய்தி யாக வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in