Published : 31 Jan 2023 03:40 AM
Last Updated : 31 Jan 2023 03:40 AM

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல் - குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்கும் மீட்புக் குழுவினர். படம்: ஏஎப்பி

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 63 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்ஸிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். பெஷாவர் நகரின் லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 23 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த மசூதி, நகரின் காவல் துறை தலைமையகம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ளது. தொழுகையில் காவல் துறையினர் அதிகம் பங்கேற்றுள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களில் பலரும் காவல் துறையினர் என்று கூறப்படுகிறது.

தொழுகையின்போது, முதல் வரிசையில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் தொடர்பு உடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். தாக்குதலுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பெஷாவர் நகரில் தீவிரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு தலிபான் அமைப்பினர் கடந்த காலங்களில் இதுபோன்ற கொடூர தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எனவே இந்த தாக்குதலையும் அவர்களே நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) எனப்படும் இந்த அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சியில் உள்ள தலிபான்களுடன் நெருக்கமாக உள்ளனர். பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்களை இன்னும் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்த அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக போரிட்டு வருகிறது.

பாகிஸ்தான் அரசுடன் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்த அமைப்பு கடந்த நவம்பரில் முறித்துக் கொண்டது. இதன் பிறகு, பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து,அரசு திவாலாகும் நிலையில் இருப்பதால் சர்வதேச செலாவணி நிதியத்தின் உடனடி உதவியையும் நாடியுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரான பெஷாவரில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

போலீஸாருக்கு எதிராக டிடிபிஅமைப்பினர் சில மாதங்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு பெஷாவரில் கடந்த 22-ம் தேதி ஒரு காவல் நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்தது. எனினும் உயிரிழப்பு ஏதும் இல்லை.

பெஷாவரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷியா முஸ்லிம்களின் மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதற்குஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நேற்று நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x