

பெர்லின் வகை தாக்குதல்கள் உண்மையில் மத அச்சுறுத்தலாக மாறியுள்ளது என அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெர்மனியின் பெர்லின் நகரில் மக்களை கொல்வதற்கு முன்னர் அந்த நபர் வீடியோவில், கடவுளின் விருப்பத்தின்படி நாங்கள் உங்களைக் கொல்கிறோம் என்று கூறியுள்ளார். பெர்லின் போன்ற தாக்குதல்கள் உண்மையில் மத அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இத்தகைய வெறுப்புகளுக்கு எதிராக எப்போது அமெரிக்காவும், பிற நாடுகளும் போராடப் போகிறது?" என்று பதிவிட்டுள்ளார்.
பெர்லின் தாக்குதலில் சந்தேகிக்கப்பட்ட துனீசியாவின் அனிஸ் அம்ரி தனது சமூக வலைதளத்தில் தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
2 நிமிடம் 45 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அம்ரி நேரடியாக ஐஎஸ்ஸுடன் உள்ள தொடர்பு பற்றி கூறியிருப்பத்துடன், வான்வழித் தாக்குதல் நடத்தி, முஸ்லிம்களை கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ஜெர்மனி, துருக்கியில் நடந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்களின் மூலம், முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற தனது திட்டம் மிகச் சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.