

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட மம்மிகளில் (பதப்படுத்தப்பட்ட மனித உடல்) சீனாவின் லேடி டாய் மம்மியே மிகச் சிறப்பாகப் பதப்படுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் லேடி டாய். இன்றும் இவரது உடலில் உள்ள தோல் மென்மையாக இருக்கிறது. தலை முடிகளும் இமை முடிகளும் கூட அப்படியே இருக்கின்றன. மூட்டுகள் வளையக்கூடிய விதத்தில் உள்ளன. புகழ்பெற்ற ஆன் வம்சத்தைச் சேர்ந்தவர் லேடி டாய். ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சில பிரச்சினைகளால் இவரது இதயம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. 50 வயதில் மரணத்தைச் சந்தித்தார். ஹுனான் மலைப் பகுதியில் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இவரது பதப்படுத்தப்பட்ட உடலைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். கல்லறைக்குள் நூற்றுக்கணக்கான பட்டாடைகள், 160 மரப் பொம்மைகள், அலங்காரச் சாதனங்கள், விலைமதிப்பு மிக்கப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நடுவில் லேடி டாய் கல்லறை இருந்தது. 20 அடுக்குகளாகப் பட்டுத் துணி உடலைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப்பட்ட 4 சவப்பெட்டிகளுக்குள் உடல் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் கரியையும் களிமண்ணையும் சேர்த்து அடைத்து வைத்திருந்தார்கள். தண்ணீர்ப் புகாத இந்தப் பெட்டிகளுக்குள் பாக்டீரியா கூட நுழையமுடியவில்லை என்கிறார்கள்.
மம்மி செய்ததிலும் சீனர்கள் கெட்டிக்காரர்கள்!
அமெரிக்காவின் போர்ட்லாண்ட் நகரில் வயது வந்தோருக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. என்னதான் படித்தாலும் வயது வந்தவர்களும் பல விஷயங்களைக் கையாளத் தெரியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களுக்குக் கற்பித்து வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவே இந்தப் பள்ளி. 18 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். ‘பள்ளி, கல்லூரி கற்றுக் கொடுக்காத விஷயங்களை நாங்கள் அளிக்கிறோம். இன்று மனநலம் பேணுவது மிக முக்கியமானது. எங்கள் மனநல ஆலோசகரிடம் பிரத்யேகமாக கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்குச் சமைக்கவே தெரியவில்லை என்ற குறை இருக்கும். அவர்களுக்குச் சமையல் நிபுணர்களைக் கொண்டு பயிற்சியளிக்கிறோம். கடன் வாங்கிவிட்டு, எப்படி அடைப்பது என்று தவிப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிறோம். குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறோம். எங்கள் பள்ளிக்கு வருகிறவர்கள், தன்னம்பிக்கையுடனும் எதையும் சமாளிக்கும் திறனுடனும் இங்கிருந்து செல்கிறார்கள். சிலருக்கு வாரத்தில் ஒரு நாள்தான் ஒதுக்க முடியும் என்பதால், அவர்களுக்காகவே சிறப்புப் பட்டறைகளை நடத்தி வருகிறோம். இதில் நிதி மேலாண்மை, உடல் ஆரோக்கியம், வேலையிலும் வாழ்க்கையிலும் முன்னேற்றம், தியானம், கடனுக்கான தீர்வு, சேமிப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கிறோம். ஒவ்வொரு பட்டறையிலும் 50 பேர் கலந்துகொள்கிறார்கள். 2,700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறோம்’ என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான ரேச்சல் வின்ஸ்டீன். ‘கடன் அட்டைகளால் நான் மிகப் பெரிய சிக்கலில் மாட்டியிருந்தேன். சமாளிக்க முடியாமல் இந்தப் பள்ளிக்கு வந்தேன். என் வருமானத்தில் வீட்டு வாடகை, உணவு, கடனுக்கு எப்படிப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று அழகாகக் கற்றுக் கொடுத்தார்கள்’ என்கிறார் 29 வயது அலிசன் மோரில். பெருகி வரும் ஆதரவைக் கண்டு, அமெரிக்கா முழுவதிலும் வயது வந்தோர் பள்ளியை ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
வாழ்க்கைக்கு உதவும் வயது வந்தோர் பள்ளி!