Published : 23 Jan 2023 12:47 PM
Last Updated : 23 Jan 2023 12:47 PM

பாகிஸ்தானில் 22 மாவட்டங்களில் மின் தடை: 2021-க்குப் பிறகு மிகப் பெரிய பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேர மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை விமர்சித்து காட்டமான பதிவுகள் பறந்தன. இந்நிலையில், மின் தடை குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பவர் க்ரிட்டில் இன்று காலை ஏற்பட்ட அலைவரிசை சரிவினாலேயே பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளது.

ஆனால், அதற்கு முன்னதாகவே, குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை கம்பெனி உள்ளிட்ட பல்வேறு மின் பகிர்மான நிறுவனங்களும் மின் தடை பற்றி ட்விட்டரில் தகவல் தெரிவித்தன. குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை கம்பெனி தனது ட்விட்டர் பக்கத்தில் "குட்டு நகர் முதல் குவெட்டா நகர் வரையிலான இரண்டு மின் கடத்திகளில் மின் விநியோகம் தடைபட்டது. இதனால் பலோசிஸ்தானின் 22 மாவட்டங்களில் மின் விநியோகம் தடைபட்டது. லாகூர், கராச்சியிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் மட்டும் 117 பவர் கிரிடுகள் மின் விநியோகம் இல்லாமல் முடங்கியுள்ளது. பெஷாவர் நகரும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

2021-ல் தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஒரு பவர் க்ரிடில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மிகப்பெரிய அளவில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பாகிஸ்தானில் இப்போதுதான் இவ்வளவு பெரிய அளவிலான மின் தடை ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது.

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். உணவுப் பொருள் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதற்கேற்ப விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்து கொண்டே வருகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபவர் பக்துன்வா என எல்லா மாகாணங்களிலும் மக்கள் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இதனால், பொது இடங்களில் விநியோகிக்கப்படும் இலவச உணவுகளைப் பெறுவதற்காக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x