Published : 23 Jan 2023 05:08 AM
Last Updated : 23 Jan 2023 05:08 AM

பதற வைக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம்: மீள்வதற்கு என்ன வழி?

பிரதிநிதித்துவப் படம்

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அண்டை நாடுகள் வலுவிழந்து போவது நமக்கு நல்லதல்ல. அந்த நாட்டுடன் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு தொடங்கி, அகதிகள் ஊடுருவல், அதனால் நிகழக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரை பல சவால்களை நாம் சந்திக்க வேண்டி வரும். இதன் தொடர் விளைவாக எழும் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தம் தவிர்க்க இயலாதது. இது நமது வளர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுத்தவே செய்யும். எனவே, பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார பதற்றம் விரைவில் தணிந்து இயல்பு நிலை திரும்பினால் நல்லது.

பொருளாதாரத்தில், தெற்காசியாவின் வலுவற்ற நாடாகப் பாகிஸ்தான் உள்ளதாக உலக வங்கி கூறுகிறது. இந்த இக்கட்டில் இருந்து நாட்டை மீட்க அறிவார்ந்த யுக்தி, கடுமையான முடிவுகளை எடுப்பதற்கான அரசியல் துணிவு, மக்களை ஊக்கப்படுத்தி நாட்டின் மறுகட்டமைப்புக்கு வழி நடத்திச் செல்லும் பொறுப்பு வாய்ந்த தலைமை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணக் கிடைக்கவில்லை. எனவே இப்போதைக்கு, ‘வெளி ஆதரவு’ மட்டுமே பாகிஸ்தான் நாட்டை மோசமான விளைவுகளில் இருந்து காக்க முடியும்.

பாகிஸ்தானின் பொருளாதார சீர்குலைவுக்கு கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக கூறப்படுகிறது. விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் நடக்கவில்லை என்று கூறுகின்றனர். உணவுப்பொருள் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாத அரசு நிர்வாகம், மக்களை இன்று உணவுக்காகத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. கோதுமை விளைச்சலை ஊக்குவிக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, வேளாண் தொழிலை மீட்டெடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உணவுப் பொருள் இறக்குமதியில் அதிக அக்கறை காட்டுகிறது. தற்போது பாகிஸ்தானின் அந்நிய செலாவணிக் கையிருப்பு மிகவும் குறைந்துள்ளது. கைவசமுள்ள 5 பில்லியன் டாலர், 3 வாரங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதன் பிறகு..?

சென்ற மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5% ஆக உயர்ந்தது.வெளிச்சந்தையில் அத்தியாவசிய, உணவுப்பொருட்களின் விலை, முந்தைய மாதத்தை விட 30% முதல் 50% வரை அதிகரித்த வண்ணம் உள்ளது. சாமான்யர்களின் அன்றாட வாழ்க்கை சவாலாக மாறி வருகிறது.

“பொருளாதார மேலாண்மை மோசமாக இருக்கிறது; பொது நிதியைக் கையாளுவதில் திறமையில்லை; பொருளாதார நிலையற்ற தன்மை, சமூக முன்னேற்றத்தில் அலட்சியம், பரவலான ஊழல், வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு, ஆழமாகப் பரவும் வறுமை, கடன் சுமைப் பெருக்கம். தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக, அந்நிய சக்திகளை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறோம்” என்று சில ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானின் பிரபல பொருளாதார நிபுணர் மீக்கல் அஹமது வெளிப்படையாகக் கூறினார். யாரும் செவி மடுக்கவில்லை.

“அந்நியக் கடன் பெறுவதை அரசுத் துறைகள் கொண்டாடுகின்றன. மற்றவரின் பணத்தில் வாழ்வது தேசிய சாதனை ஆகாது. இரவல் வளர்ச்சி நீண்ட நாளைக்கு உதவாது” என்று அங்கே பலரும் எச்சரித்தார்கள். எந்தப் பலனும் இல்லை. இன்று..? அந்நிய நிதியுதவியை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறது நாடு. தவறான ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார மேலாண்மை எந்த அளவுக்கு சீரழிவைத் தரும் என்பதற்கு பாகிஸ்தான் மற்றுமொரு உதாரணம்.

உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குதல் மற்றும் ஊரகப் பொருளாதாரத்தை வலுவாக்குதல் மூலம் மட்டுமே படிப்படியாக பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி காண முடியும். இதற்கு சில ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் இதுதான் அந்த நாடு பயணிக்க வேண்டிய சரியான பாதை. இந்த மாதம் சுமார் 450 மில்லியன் டாலர் அளவுக்கு உலக வங்கி நிதியுதவி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்து இருந்தார் பாகிஸ்தான் பிரதமர். ஆனால், அடுத்த நிதியாண்டில்தான் இது பரிசீலிக்கப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இனி சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமே ஓரளவுக்கு உதவ முடியும். இந்நிலையில், இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுமாறு அமீரகம், பாகிஸ்தானுக்கு அறிவுரை கூறியுள்ளதாய் செய்திகள் வருகின்றன.

அண்டை நாடுகளுடன் நட்புறவு என்றைக்கும் நல்லது. அண்டை நாடுகள்தாம் ஆபத்தில் விரைந்து உதவ முடியும். ஆனால் சீனா போன்ற வல்லரசு நாடுகளின் உதவி தீர்வைத் தராது. பாகிஸ்தானின் பொருளாதார சீர்குலைவுக்கு சீனாவின் உதவி ஒருவகையில் காரணம் என்கிற கருத்தும் பரவி வருகிறது. அப்படியானால், இந்தியா போன்ற ஜனநாயக நாடுதான், உண்மையாகக் கைகொடுத்து உதவ முடியும். இதனால் இந்தியாவுக்குப் பெருமை என்பதை விட, உலக அமைதிக்கு இது மிக நல்லது என்பதே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 75 ஆண்டுகளில், நேரு தொடங்கி இந்திய அரசியல் தலைமை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பொருளாதார நடவடிக்கைகளின் பயன் நமக்குமே கூட இன்றுதான் புரிய வருகிறது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சி உலக நாடுகளுக்குச் சொல்லும் வலுவான செய்திகள் இரண்டு. அரசின் பொருளாதார மேலாண்மை அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை வரை நீள்கிறது. எனவே, ஒருபோதும் பொருளாதாரக் கொள்கையில் அலட்சியமாக இருக்கக் கூடாது. இரண்டாவது, அந்நிய உதவி புதை மணல் போன்றது. அளவு கடந்தால், மீள்வது எளிதல்ல. எனவே, அந்நிய கடன் பெறுவதில் கூடுதல் கவனம் தேவை. உலகம் உணருமா..?

இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுமாறு நமது நட்பு நாடு அமீரகம், பாகிஸ்தானுக்கு அறிவுரை கூறியுள்ளதாய் செய்திகள் வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x