7 அடி உயர டீன் ஏஜ் பெண் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்

7 அடி உயர டீன் ஏஜ் பெண் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்
Updated on
1 min read

உலகிலேயே மிகவும் உயரமான டீன் ஏஜ் பெண் துருக்கியில் வாழ்கிறார். 17 வயதாகும் இவரின் உயரம் 7 அடி ஆகும். அதன் காரணமாக, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ருமேசா கெல்ஜி எனும் அந்தப் பெண் 213.6 சென்டி மீட்டர் உயரம் கொண்டவர். இவர் தற்போது 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சராசரி உயரம் கொண்ட தன் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் துருக்கியில் வசித்து வரும் இவர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது குறித்து கூறியதாவது:

"கின்னஸ் சாதனைப் புத்தகத் தில் இடம்பிடிப்பது எனது கனவாக இருந்தது. சாதனையாளராக இருப்பது மிகவும் பெருமைமிக்க விஷயம். சிறப்புத் திறன் கொண்ட மனிதர்கள் மட்டுமே இத்தகைய சாதனைகளை மேற்கொள்ள முடியும். நான் அவர்களில் ஒருவர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

சிலர் என் உயரத்தைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். ஆனால் நான் மற்றவர்களைக் காட்டிலும் தனித்துவமாக இருக்கவே விரும்புகிறேன்.

என் உயரம் என்னை சிறப்புக்குரியவராக ஆக்குகிறது. உயரமான இடத்தில் இருந்து கீழே மனிதர்களைக் குனிந்து பார்ப்பது ஒன்றும் தவறானது அல்லவே" என்றார்.

அவரின் இந்த வளர்ச்சிக்கு 'வீவர்ஸ் சிண்ட்ரோம்' என்ற குறைபாடே காரணம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

மருத்துவர்கள் இதற்கு மேல் அவர் உயரமாவதை எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள். அதனால் துருக்கியில் உள்ள உலகிலேயே மிகவும் உயரமான மனிதர் எனும் பெருமையைப் பெற்ற சுல்தான் கோசெனின் சாதனையை அவரால் முறியடிக்க முடியாது. காரணம் அவரது உயரம் 8 அடி 3 அங்குலமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in