Published : 19 Jan 2023 09:29 PM
Last Updated : 19 Jan 2023 09:29 PM

மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட்டிடம் 103 கோடி ரூபாய் மோசடி!

உசைன் போல்ட் | கோப்புப்படம்

கிங்ஸ்டன்: மின்னல் வேக ஓட்டக்காரர் என அறியப்படும் தடகள வீரர் உசைன் போல்ட் சுமார் 103 கோடி ரூபாய் நிதி மோசடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

ஜமைக்காவை சேர்ந்த போல்ட், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 4x100 ரிலேவில் உலக சாதனை படைத்துள்ளார். 2008, 2012, 2016 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர். கடந்த 2017-ல் ஓய்வு பெற்றார்.

இந்த சூழலில்தான் அந்த நாட்டில் கிங்ஸ்டன் நகரில் இயங்கி வரும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் அவரது கணக்கில் இருந்த 12.7 மில்லியன் டாலர்கள் மாயமாகி உள்ளன. தற்போது அந்த கணக்கில் வெறும் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே இருப்பதாக அவரது வழக்கறிஞர் லின்டன் கார்டன் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனம் தங்களது நிதியை திரும்ப தராத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடும் திட்டம் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய ஏமாற்றம். இந்த மோசடியில் இருந்து போல்ட் தனது பணத்தை வெற்றிகரமாக மீட்பார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்கள் நிறுவனத்தில் முன்னாள் ஊழியர் ஒருவர் மோசடி செய்து பல்வேறு கணக்குகளில் இருந்து பணத்தை தவறான வழியில் கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜமைக்கா நாட்டின் நிதி மோசடி தடுப்புக் குழு விசாரித்து வருவதாக தகவல். போல்ட் மட்டுமல்லாது பல்வேறு தனி நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x