Published : 19 Jan 2023 02:17 PM
Last Updated : 19 Jan 2023 02:17 PM

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான முதல் இந்தியர் - பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம்

அன்னபோலிஸ்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான இந்தியாவில் பிறந்த அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் 7 வயதாகும்போது அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார். தற்போது 58 வயதாகும் அவர், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். பகவத் கீதை மீது சத்தியம் செய்து அவர் பதவி ஏற்றார்.

மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராகி இருக்கும் முதல் இந்தியர், முதல் கருப்பினத்தவர், முதல் பெண் ஆகிய பெருமைகளுக்கு இவர் சொந்தக்காரராகி இருக்கிறார். பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்துப் பேசிய அருணா மில்லர், ''துணைநிலை ஆளுநராக தேர்வு செய்த மேரிலேண்ட் வாக்காளர்களுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேரிலேண்ட் என்னை பெருமை அடையச் செய்துள்ளது. என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. நாம் தற்போது ஒரு வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம். அதிகாரம் வரலாற்றை உருவாக்குவதில்லை; மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. எனது இந்த வெற்றி நம் அனைவருக்குமானது'' என தெரிவித்துள்ளார்.

அருணா மில்லரின் தந்தை ஒரு பொறியியல் மாணவராக 1960-களில் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வேலை தேடிக்கொண்டு 1972-ல் தனது குடும்பத்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, 7 வயது சிறுமியாக அருணா அமெரிக்கா சென்றுள்ளார். அருணாவுக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x