

சீனாவில் கேஎப்சி, பீட்சா ஹட், மெக் டொனால்ட்ஸ் போன்ற பன்னாட்டு உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சி பரிமாறப்பட்ட குற்றச்சாட்டில் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் உட்பட 5 பேரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஷாங்காய் நகரில் உள்ள ஹுசி உணவு நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் ஹாங் ஹுய் கைது செய்யப்பட்ட நபர் ஆவார். கெட்டுப்போன இறைச்சி என்று தெரிந்த பிறகும் அவற்றை உணவகங்களுக்கு அனுப்புவது அங்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
இவைதான் கேஎப்சி, மெக்டொனால்ட்ஸ், பீட்சா ஹட், பர்கர் கிங் செவன் லெவன், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு உணவு நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது. ஹுசி உணவு நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 100 டன் இறைச்சியை கடைகளுக்கு செல்ல விடாமல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.
பன்னாட்டு உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி உணவுகள் பரிமாறப்பட்டது குறித்து தேசிய அளவில் விசாரணை நடத்த சீன உணவுப் பொருள் தர கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டது. பதப்படுத்தப்பட்ட மட்டன், சிக்கன் உள்ளிட்டவற்றை குறிப் பிட்ட காலத்துக்குள் பயன்படுத்தி விட வேண்டும். ஆனால் சீனாவில் கேஎப்சி, பீட்சா ஹட், மெக் டொனல்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு உணவகங்களுக்கு காலாவதியான இறைச்சி விநியோகிக்கப்பட்டு, அவை சமைத்து வழங்கப்பட்டுள் ளது என்பது முக்கியக் குற்றச் சாட்டாகும்.
அரசின் உத்தரவை அடுத்து பன்னாட்டு நிறுவனங்கள் பல இறைச்சி உணவை விற்பதை நிறுத்தியுள்ளன. சில உணவகங் களில் குறிப்பிட்ட இறைச்சி உண வுகள் கிடைக்காது என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.