நடப்பு ஆண்டில் பெரும் வறட்சியை எதிர்கொள்ளும் கென்யா

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

நைரோபி: நடப்பு ஆண்டில் கென்யாவின் 15 மாகாணங்களில் சுமார் 1 கோடி மக்கள் பட்டினியில் சிக்கும் அபாயம் இருப்பதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கென்யாவில் நிலவும் வறட்சி குறித்து சமீபத்தில் சில தன்னார்வ அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டன. தற்போது அவற்றின் முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆய்வு முடிவுகளின் விவரம்: “கென்யாவில் வரும் பிப்ரவரி - மே மாதங்களில் 15 மாகாணங்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்திக்க உள்ளன. இதனால் 1 கோடி மக்கள் வரை பட்டினியில் சிக்கலாம்.

குறிப்பாக துர்கானா, மர்சபிட், இசியோலோ, வஜிர், மந்திரா, கார்சியா போன்ற பகுதிகள் கடுமையான வறட்சியை சந்திக்க உள்ளன. இதனால் சுமார் 40 லட்சம் மக்களுக்கு அவசரமான மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலை உள்ளது.

2022-ஆம் ஆண்டிலேயே கென்யாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவியது. இந்த நிலையில், தற்போது வறட்சி தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கென்யாவில் மழை பொழிவு சரிவர இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் உணவு உற்பத்தி பாதித்துள்ளது. இந்த நிலையில், நடப்பு 2023-ஆம் ஆண்டிலும் மழை பொழிவு சராசரிக்கு கீழே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தால் உலகெங்கிலும் மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. இவ்வாறான சூழலில் உலகத் தலைவர்கள் தலையிட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் விளைவு மோசமாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in