

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில் இத்தாலி நிறுவன உயர் அதிகாரிக்கு அந்நாட்டு கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. குடியரசுத்தலைவர், பிரதமர் உள்பட முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
முந்தைய ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியின் போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இத்தாலி நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்நாட்டில் தொடரப்பட்ட வழக்கில், கணக்கு வழக்கில் முறைகேடு செய்ததாகக் கூறி, பின்மெக்கனிக்கா குழும உயர் அதிகாரிகளான கியூசெப் ஒர்சி மற்றும் புருனோ ஸ்பக்னோலினி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மிலன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ஒர்சிக்கு நான்கரை ஆண்டுகளும் ஸ்பக்னோலினிக்கு 4 ஆண்டு களும் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, கீழ் நீதிமன்ற தீர்ப்பும் மிலன் மேல் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பும் முரண்பாடாக உள்ளதாக அரசு தரப்பிலும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, ஒர்சிக்கு விதிக் கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர் பாக இந்தியாவிலும் வழக்கு நடைபெறுகிறது.