Published : 11 Jan 2023 09:16 AM
Last Updated : 11 Jan 2023 09:16 AM

பாகிஸ்தானில் உணவு பஞ்சம் - 3 வாரங்களில் திவாலாகும் என எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. கோதுமை மாவு வாங்க ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 3 வாரங்களில் அந்த நாடு திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பயிர் சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த அக்டோபரில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறை ஈடு செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழலில் பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 3 வாரங்கள் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வது கேள்விக்குறியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் முழுவதும் கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 20 கிலோ கொண்ட கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,100-க்குவிற்கப்படுகிறது. அரசு தரப்பில் சில இடங்களில் மானிய விலையில் கோதுமை மாவு வழங்கப்படுகிறது. அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் பெரும்பாலான நகரங்களில் கோதுமை மாவுக்காக பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. கடந்த சில நாட்களில் கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோதுமை மாவு மட்டுமின்றி இதர அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.155, ஒரு கிலோ வெங்காயம் ரூ.280, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.700-க்கு விற்கப்படுகிறது. சமையல் காஸ் சிலிண்டர்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து ரத்து செய்யப்பட்டபோது இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதை பாகிஸ்தான் அரசுநிறுத்தியது. இதனால் பாகிஸ்தானின் இறக்குமதி செலவு அதிகரித்தது. இதுவும் அந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கூறும்போது"அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்திருப்பதால் அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும். இலங்கையை போன்று அந்த நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும்" என்று எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x