சே நினைவிடத்துக்கு கொண்டு வரப்பட்ட ஃபிடலின் அஸ்தி

சே நினைவிடத்துக்கு கொண்டு வரப்பட்ட ஃபிடலின் அஸ்தி
Updated on
2 min read

ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி அவரது தோழரும், கியூபப் புரட்சியில் ஃபிடலுக்கு வலது கரமாக செயல்பட்டவருமான சே குவேராவின் நினைவிடத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இரண்டு நாட்களாக ராணுவ வாகனத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொடியசைத்து ஃபிடலுக்கு மரியாதை செலுத்தினர்.

ஃபிடலின் இறுதிச் சடங்கு சாண்டியாகோ டே கியூபாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் புதன்கிழமை சான்டா கிளாராவில் புரட்சியாளர் சே குவேராவின் அஸ்தி வைக்கப்பட்ட நினைவிடத்துக்கு ஃபிடலின் அஸ்தி கொண்டு வரப்பட்டது.

வரலாற்றில் தங்களது நட்பை பதிவு செய்த இரு புரட்சியாளர்களும் மீண்டும் ஒன்றாக சந்தித்த நிகழ்வை அங்கு கூடியிருந்த மக்கள் பலரும் பாடல் பாடி, நடனம் ஆடி கண்ணீருடன் நினைவூட்டினர்.

ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்தியை எடுத்துச் செல்லும் ராணுவ வாகனம்

இது குறித்து அஞ்னர் சான்செஸ் (33) என்ற நபர் கூறும்போது, "கியூப வரலாற்றை மாற்றிய இரு புரட்சியாளர்களும் மீண்டும் சந்தித்துக் கொண்ட வரலாற்று நிகழ்வு இது" என்று குறிப்பிட்டார்.

மரியா கொன்ஸ்சேலிஸ் என்ற பொறியாளர், "நான் வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன். நான் கறுப்பர் இனத்தைச் சார்ந்தவன். ஃபிடல் - சே குவேராவின் போராட்டம் இல்லை என்றால் நான் நானாக இருந்திருக்க முடியாது" என்று கூறினார்.

சே குவேரா - ஃபிடல் காஸ்ட்ரோ சந்திப்பும், நட்பும்

1954-ல் ஃபிடல் காஸ்ட்ரோவும் அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் 'சே' வை முதல்முதலாக மெக்சிகோவில் சந்தித்தனர்.

உலகின் சர்வாதிகாரம் படைத்த அமெரிக்காவுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் கடும் சவாலாக இருந்தனர்.

சே குவேராவின் உதவியுடன் கொரில்லா தாக்குதல் மூலம் பாடிஸ்டாவின் ராணுவத்தை வீழ்த்தி 1959-ல் கியூபாவின் பிரதமரானார் ஃபிடல் காஸ்ட்ரோ.

சே குவேரா கியூபாவின் நிதியமைச்சராகவும், கியூபா தேசிய வங்கியின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்தார் . புரட்சிக்கு எல்லைகள் இல்லை என்ற சே குவேரா, காங்கோவில் புரட்சிப் படைகளுக்கு உதவினார். பின்னர் பொலிவியாவுக்குச் சென்றார். அங்கு ஆஸ்துமா பாதிப்பால் இருந்தவரை 1967 அக்டோபர் 8-ல் சுற்றிவளைத்த பொலிவியப் படை, அக்டோபர் 9-ல் சே குவேராவை சுட்டுக் கொன்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in