

இருதரப்பு உறவுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதை இந்தியா சதி செய்து முறியடித்து வருகிறது, பேச்சு வார்த்தைகளைத் தவிர்க்க போலி காரணங்களைத் தெரிவித்து வருகிறது என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஸகாரியா கூறியதாவது:
இருதரப்பு உறவுகள் சரிந்து கொண்டே செல்கின்றன. நல்லுறவுகள் ஏற்படுவதற்கான எந்த ஒரு நல்லெண்ண முயற்சிகளையும் இந்தியா சதி செய்து முறியடித்து வருகிறது.
பேச்சு வார்த்தைகளைத் தவிர்க்க போலியான காரணங்களை இட்டுக் கட்டி கூறிவருகிறது. ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏற்படும் போதும் அவர்கள் நழுவி விடுகின்றனர்.
பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்தி, எல்லை பதற்றத்தைப் பயன்படுத்தி காஷ்மீரிகளை அடக்குமுறை செய்யும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மறைத்து வருகின்றனர்.
இருதரப்பு உறவுகளும், பாதுகாப்பும் மேம்பட இந்திய அணுகுமுறையும் நடத்தையும் முன்னேற வேண்டும், முக்கியமாக காஷ்மீரில் ரத்தம் சிந்தப்படுவது தவிர்க்க வேண்டும்.
பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கவும் இந்தியா தன் உறுதிப்பாட்டை காண்பிக்க வேண்டும்.
பேச்சு வார்த்தைகளை முடக்க பதான்கோட் தாக்குதல் என்ற பாசாங்கான காரணத்தை இந்தியா வைத்துள்ளது, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் நிலவும் அமைதி தற்காலிகமானதே, ஐ.நா., அமெரிக்கா மற்றும் சில நாடுகள் வலியுறுத்தலினால் ஏற்பட்ட பன்னாட்டு அழுத்தங்களினால் அங்கு அமைதி நிலவுகிறது.
பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து வாசல்களையும் பாகிஸ்தான் திறந்தே வைத்துள்ளது, ஆனால் இந்தியாதான் சூழலை சீரழித்து முயற்சிகளை கெடுத்து வருகிறது. நவம்பரில் சார்க் மாநாடு விவகாரத்தில் சதி செய்தது, சார்க் மாநாடு அரசியல் பற்றியது அல்ல, அது சமூக-பொருளாதார சூழ்நிலையை முன்னேற்றுவது பற்றியது, இதனை சதி செய்து முறியடித்ததோடு ஹார்ட் ஆஃப் ஆசியா மாநாட்டிலும் இதே அணுகுமுறையைத்தான் இந்தியா கடைபிடித்தது” என்றார் அவர்.