சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 24,000 இந்தியர்களுக்கு சிறை, அபராதம் இல்லை: குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 24,000 இந்தியர்களுக்கு சிறை, அபராதம் இல்லை: குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
Updated on
1 min read

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 24,000 இந்தியர்கள் தாய்நாடு திரும்பிச் செல்லவோ அல்லது பணிவிசா மாற்றத்திற்கோ குவைத் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்தால் அபராதம், சிறைத்தண்டனை எதுவும் விதிக்கப்பட மாட்டாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

“இந்தியாவுடன் உள்ள வலுவான இருதரப்பு உறவுகள்” காரணமாக இந்த சலுகையை அளிப்பதாக உள்துறை அமைச்சக தலைவர் மேஜர் ஜெனரல் தலால் இப்ரஹிம் மராஃபி தெரிவித்துள்ளார்.

குவைத் நகரில் கூடியிருந்த இந்திய ஊடகத்துறையினரிடம் அவர் கூறும்போது, “இந்தியப் பணியாளர்களிடம் நாங்கள் சலுகை காட்டியே நடந்து வருகிறோம். ஆனால் சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம், சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் குடியேற்றத்துறையை அணுகினால் அவர்கள் இந்தியா திரும்பிச் செல்ல உதவி செய்கிறோம். இந்தியாவுடனான எங்களது வலுவான உறவுகளை கருத்தில் கொண்டு இந்தச் சலுகைகளை அளிக்கிறோம்” என்றார்.

சுமார் 10 லட்சம் இந்தியர்கள்

குவைத்தில் 10 லட்சம் இந்திய பணியாளர்கள் உள்ளனர். அந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

இந்நிலையில் மேஜர் ஜெனரல் மராஃபி கூறும்போது, “சட்ட விரோதமாக நீண்ட நாட்கள் தங்கி விடுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பணியாளர்கள் தங்கள் ஸ்பான்சர்களை விடுத்து பணத்திற்காக பிற நிறுவனங்களுக்கு பணியாற்ற சென்று விடுகின்றனர். மேலும் சில சந்தர்ப்பங்களில் ஸ்பான்சர் அயல்நாடுகளில் இருக்கும் போது இவர்களது விசாக்காலம் முடிந்து விடுகிறது. இதனால் பயண ஆவணங்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

சிலர் பணியாளர்களின் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்துக் கொள்கின்றனர். இந்தப் பணியாளர்களே இவர்களை விட்டு பணத்திற்காக வேறு நிறுவனங்களை நாடுகின்றனர். எங்களிடம் தெரிவித்தால் இவர்களுக்கு உதவ அரசு தயாராகவே உள்ளது.

குடியேற்றத் துறை இவர்கள் தாய்நாடு திரும்பிச் செல்லத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும். இவர்களுக்கு சிறிய தொகை அபராதம் விதிக்கப்படுகிறது ஆனால் அதுவும் பெரும்பாலும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தவறான வழிகளில் செல்பவர்களை விட மாட்டோம்.

2018 சட்ட விரோத இந்திய பணியாளர்கள் ஏற்கெனவே இந்தியா திரும்ப உதவி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

சம்பள நிலுவை உள்ளிட்ட விவகாரங்களில் உள்துறை அமைச்சகம் பணியாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நீதிபெற உதவுகிறது என்று கூறிய உள்துறை அமைச்சக அதிகாரி மொகமது அஜாமி, இவர்களுக்கு ஒருமாதத்தில் நீதி கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது. அரசும், இவர்களுக்கு உதவ வழக்கறிஞர்கள் கமிட்டி அமைத்துள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in