மியான்மர் வகுப்புக் கலவரத்தில் இருவர் பலி

மியான்மர் வகுப்புக் கலவரத்தில் இருவர் பலி
Updated on
1 min read

மியான்மரில் முஸ்லிம்களுக்கும் பெளத்த மதத்தினருக்கும் இடையே நடைபெற்ற வகுப்பு கலவரத்தில் இருவர் பலியாயினர்.

மியான்மரில் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. 2011-ம் ஆண்டு ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையே வகுப்பு கலவரங்கள் வெளியில் தெரிய ஆரம்பித்தன. சமீபகாலத்தில் இந்தக் கலவரங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.

மியான்மரில் முஸ்லிம்கள் சுமார் 6 கோடி பேர் வசிக்கின்றனர். இஸ்லாம் மதத்தால் பெளத்த மதம் பெரும் அபாயத்துக்கு உள்ளாகியிருப்பதாக பெளத்தத் துறவிகள் பலர் கருதுகின்றனர். அதன் காரணமாக கடந்து இரு ஆண்டுகளாக முஸ்லிம்களைக் குறிவைத்து நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,40,000 மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ரோஹிங்கயா முஸ்லிம்கள் ஆவர்.

இந்நிலையில் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில், புதன்கிழமை அதிகாலை பாலியல் வன்கொடுமை குற்றத்துக்குக் காரணம் என்று கூறி முஸ்லிம் ஒருவரின் தேநீர் விடுதியை பெளத்தர்கள் தாக்கினர்.

இதையடுத்து இருபிரிவினருக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். பலியான இருவரில் ஒருவர் முஸ்லிம் என்றும் மற்றொருவர் பெளத்தர் என்றும் தெரியவந்துள்ளது. சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

தேநீர் விடுதி தாக்கப்படுவதற்கு முன்பு விராத்து எனும் பெளத்த மதத்துறவி முகநூலில் அந்தத் தேநீர் விடுதியின் உரிமையாளர்கள் மீது குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வீடுகள் மீது கற்களை வீசியது டன் சாலையில் நின்றிருந்த பல கார்களை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் சுமார் 450 பேர் கத்தி கம்புகளுடன் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

தகவலறிந்து அங்கு வந்த காவலர்கள் கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

மாதாந்திர வானொலி உரையில், மியான்மர் அதிபர் தியான் சென் பேசியபோது, "நமது நாடு பல்வேறு இனக்குழுக்களையும் பல்வேறு மதங்களையும் கொண்டுள்ள நாடாகும்.

இங்கு சீர்திருத்தங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள அனைத்துக் குடிமக்களின் ஒத்துழைப்பும் தேவை. ஆகவே, வேறுபாடுகளைக் களைந்து மத வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என்று கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in