

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், எம்.பி. ஒருவரின் வீட்டில் தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.பி.யின் இரு பேரன்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்டு மாகாண எம்.பி. மீர் வாலியின் வீடு காபூல் நகரில் உள்ளது. இந்த வீட்டுக்குள் தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதிகள் 3 பேர் புதன் மாலை நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆப்கன் பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இரு தரப்பிலும் சுமார் 10 மணி நேரம் நடந்த மோதலுக்குப் பிறகு 3 தீவிரவாதிகளும் நேற்று அதிகாலை கொல்லப்பட்டனர்.
இதனிடையே தீவிரவாதிகளின் தாக்குதலில் எம்.பி. மீர் வாலியின் இரு பேரன்கள், அவரது பாதுகாவலர்கள், மீர் வாலியின் வீட்டுக்கு வந்திருந்த உருஸ்கான் மாகாண எம்.பி. ஒபைதுல்லா பராக்சாயின் மகன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலின்போது தப்பிக்கும் முயற்சியாக மீர் வாலி, மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் காயம் அடைந்த அவர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் குறித்து தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில், “ஹெல்மண்டு மாகாணத்தில் நிலவும் பாதுகாப்பு சீர்கேட்டுக்கு தீர்வு காண்பதற்காக மீர் வாலியின் வீட்டில் அதிகாரிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. இதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தற்கொலைப் படையினர் அந்த வீட்டில் தாக்குதல் நடத்தினர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும். தேசத் தலைவர்களின் வீடுகளில் தாக்குதல் நடத்துவதை எந்தவொரு மதமோ அல்லது இஸ்லாமிய நெறிகளோ நியாயப்படுத்தாது” என்று கூறியுள்ளார்.
ஆப்கன் அரசு – தலிபான்கள் இடையே தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கிட, சர்வதேச அளவில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குளிர் காலத்தில் தீவிரவாத தாக்குதல்கள் குறைவாக இருப்பது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக ஆப்கன் முழுவதும் தலிபான்கள் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.