

ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று வட கிழக்கு சைபீரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ரஷ்ய ராணுவ விமானம் இலியூஷின் II- 18 அவசரமாக அதிகாலை 4.45 மணிக்கு தரையிறங்கியது. விமான ஓடுபாதையில் இல்லாமல் வேறு ஓர் இடத்தில் விமானத்தை பைலட் அவசரமாகத் தரையிறக்கியிருக்கிறார். அப்போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
காயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ரஷ்ய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.