Published : 20 Dec 2016 10:50 AM
Last Updated : 20 Dec 2016 10:50 AM

துருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக்கொலை: அங்காரா பயங்கரம்

துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற ஒரு புகைப்படக் கண்காட்சி விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்த துருக்கிக்கான ரஷ்ய தூதரை மர்ம நபர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

தூதரை சுட்டுக்கொன்ற நபரை அங்கிருந்த மற்ற போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக துருக்கியின் தேசிய தொலைக்காட்சியான என்டிவி, "துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் 'அல்லாஹூ அக்பர்' என துதிபாடிவிட்டு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். பின்னர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சில புகைப்படங்களையும் அவர் சுட்டு வீழ்த்தினார். திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பீதியடைந்த மக்கள் பாதுகாப்புக்காக அங்குமிங்கும் ஓடியதால் அரங்கத்தில் பதற்றம் நிலவியது. துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் மூன்று பேர் காயமடைந்தனர்" எனத் தெரிவித்தது.

சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ். அவரது பின்னால் நிற்பவரே கொலையாளி.

சம்பவத்தை நேரில் பார்த்த ஏபி புகைப்படக்காரர் ஒருவர் கூறும்போது, "ரஷ்ய தூதரை அந்த மர்ம நபர் 8 முறை துப்பாக்கியால் சுட்டார்" என்றார்.

நடந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜக்கரோவா, "அங்காராவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் கொல்லப்பட்டார். துருக்கி அதிகாரிகளுடன் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணையில் இருக்கிறோம்" என்றார்.

மர்ம நபர் அடையாளம் தெரிந்தது:

இதற்கிடையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் துருக்கி காவல்துறையைச் சேர்ந்தவர் என அங்காரா மேயர் மெலிஹ் கோகெக் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இத்தாக்குதல் துருக்கி - ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள புதிய உறவை சிதைக்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கிறது" என்றார்.

'தி யேனி சபாக்' என்ற துருக்கியின் பிரபல இணையதளத்தில் தாக்குதல் நடத்தியவரது பெயர் எம்.எம்.ஏ (M.M.A.) எனவும் அவர் அங்காராவின் கலவர தடுப்புப் பிரிவு போலீஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரங்கிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் கொலையாளி. தரையில் கொலை செய்யப்பட்ட தூதர்.

அமெரிக்கா கண்டனம்:

துருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. "இந்த வன்முறை தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும் அது கடும் கண்டனத்துக்குரியது. உயிரிழந்த தூதரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்" என அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்திருக்கிறார்.

கொலை செய்யும் காட்சி

பீதியில் உறைந்த பொது மக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x