போலி செய்தியை நம்பி பாக். அமைச்சர் ஆவேசம்: ட்விட்டரில் குவியும் கிண்டல்கள்

போலி செய்தியை நம்பி பாக். அமைச்சர் ஆவேசம்: ட்விட்டரில் குவியும் கிண்டல்கள்
Updated on
1 min read

போலி செய்திகளை வெளியிடும் இணையதளம் ஒன்றில் வெளிவந்த போலி செய்தியை உண்மை என நம்பி இஸ்ரேலுக்கு ராணுவ மிரட்டல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப்.

கடந்த வாரம் வாஷிங்டனில் உள்ள பீட்சா உணவகம் ஒன்று குழந்தைகளை பாலியல் விவகாரத்தில் சிக்கவைக்கும் வலைப்பின்னலுடன் தொடர்புடையது என்ற போலிச் செய்தி வெளிவந்ததையடுத்து வாஷிங்டனில் உள்ள பீட்சா உணவகத்தில் புகுந்து ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதனையடுத்து தற்போது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரே ஏமாந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா முகமது ஆஸிப் மீது ட்விட்டர் வாசிகள் கடும் கிண்டல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஏடபிள்யுடிநியூஸ்.காம் என்ற இணையதளத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக போலி தலைப்புச் செய்தி ஒன்று வெளியானது. அதில், “எந்த ஒரு முன் அனுமானத்திலும் சிரியாவுக்கு பாகிஸ்தான் தனது தரைப்படைகளை அனுப்பினால், நாங்கள் பாகிஸ்தான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தி அழிப்போம்” என்று கூறப்பட்டிருந்தது. இதே போலி செய்தியுடன் “ட்ரம்புக்கு எதிராக கிளிடன் ராணுவ புரட்சி நடத்தவுள்ளார்” என்ற போலி செய்தியும் இன்னும் பல போலி செய்திகளும் வெளியாகியிருந்தன.

பாகிஸ்தான் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக வெளியான போலி செய்தியில் தற்போதைய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பெயர் தவறாக மோஷே யாலன் என்று வெளியிடப்பட்டது. இதனையும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவனித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இஸ்ரேலின் நடப்பு பாதுகாப்பு அமைச்சர் பெயர் அவிக்தார் லைபர்மேன்.

இந்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் “பாகிஸ்தானும் அணு ஆயுத நாடு என்பதை இஸ்ரேல் மறந்து விட்டது” என்று பதிவிட்டிருந்தார்.

இவர் இவ்வாறு கூறியவுடன், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், “இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக வெளிவந்த செய்தி கற்பனையானது, இத்தகைய கூற்றை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை” என்று கூறியிருக்கிறது.

ஆனால் இதற்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பதில் அளிக்கவில்லை, இதனையடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் ‘அறியாமை’ சமூக வலைத்தளங்களில் கேலிக்கு ஆளாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in