

இராக் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது.
சன்னி தீவிரவாதிகளின் சண்டையால் இராக் நாடே சின்னாபின்னமாக சிதறும் அபாயம் இருப்பதால் அதற்கு தீர்வு காண புதிய அரசு அமைக்க வேண்டும் என பிரதமருக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்துக்கு சன்னி மற்றும் குர்து பிரிவு உறுப்பினர்கள் வராமல் ஒதுங்கியதால் கோரம் இல்லாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
மூன்றாவது முறையும் பதவியில் அமர்வது என பிரதமர் நூரி போட்ட கணக்கை சண்டை நடத்தி வரும் சன்னி தீவிரவாதிகள் பிசகச் செய்துவிட்டனர். 5 மாகாணங்களில் உள்ள பெரும்பாலான நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டனர். பதவி மோகம் பிடித்து அலைவதாகவும் மத மோதலை தூண்டி விடுவதாகவும் பிரதமர் அல் நூரி மீதான புகார் வலுப்பெற்று அவரது ஆட்சி மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது.
இராக்கில் ஏற்பட்டுள்ள சிக்கல் சன்னி, ஷியா, குர்து பிரிவினரை ஒட்ட விடாமல் பிரித்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு தப்பி அகதிகளாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியிலும் வேதனையிலும் உள்ளனர்.
இராக்கில் காணப்படும் ஒற்றுமை சிதைந்த நிலையின் பாதிப்பு ஏப்ரலில் தேர்வான புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே வெளிப்பட்டுவிட்டது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான முயற்சிகளுக்கு குர்து பிரிவு எம்பி நஜிபா நாஜிப் குறுக்கீடு செய்தார். குர்திஸ்தான் பிராந்தியம் மீதான தடையை விலக்கிக் கொண்டு அதற்கு வழங்க வேண்டிய பட்ஜெட் நிதியை உடனே விடுவிக்குமாறும் வலியுறுத்தினார்.
அப்போது பேசிய ஷியா பிரிவைச் சேர்ந்தவரான மாலிகியின் கூட்டணிக்கட்சி எம்.பி. காதிம் அல் சயாதி குர்து பிராந்தியத்தில் உள்ளவர்களின் தலையை நசுக்கிவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், சன்னி பிரிவு எம்பிக்கள் சிலர் நாடாளுமன்றத்தில் ஐஎஸ் ஐஎஸ் என்று குறிப்பிட்டதுமே அவையை விட்டு வெளியேறினர். இந்த எம்பிக்கள் சார்ந்த ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர்தான் அரசுக்கு எதிரான சண்டையில் இறங்கியுள்ளனர்.