அதிகாரத்தில் இருப்பதற்காகவே புதின் போரை நடத்துகிறார்: ஜெலன்ஸ்கி கடும் விமர்சனம்

புதின், ஜெலன்ஸ்கி  | கோப்புப் படம்
புதின், ஜெலன்ஸ்கி | கோப்புப் படம்
Updated on
1 min read

கீவ்: ரஷ்ய அதிபர் புதின் தனது வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருப்பதற்காக போரை நடத்தி வருகிறார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஒருவருடத்தை நெருங்கவுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டுக்கு முந்தைய நாளில், உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஒரே நாளில் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகள் உக்ரைனின் பல்வேறு இடங்களில் ஏவப்பட்டன.

இந்தச் சூழலில் நாட்டு மக்களுக்கான புத்தாண்டு உரையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும்போது, “ ரஷ்யா சாத்தானை பின் தொடர்கிறது. புதின் நீங்கள் நடத்தும் போர் உக்ரைன் நேட்டோவுடன் இணைவதற்கு எதிரானது அல்ல. நீங்கள் பொய் கூறுகிறீர்கள். இது ஏதோ வரலாற்றுக்காக அல்ல. ஒரு நபர் (புதின்) தனது வாழ்நாளின் இறுதி வரை அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போர் நடத்தப்படுகிறது. ரஷ்யாவின் குடிமக்களை பற்றி புதினுக்கு கவலை இல்லை. ரஷ்ய அதிபர் படைகளுக்கு பின்னாலும், ஏவுகணைகளுக்கு பின்னாலும், மாளிகைகளுக்கு பின்னாலும் மக்களின் பின்னாலும் ஒளித்து கொண்டிருக்கிறார். ரஷ்ய மக்களே அவர் உங்கள் பின்னால் ஒளிந்துகொண்டு உங்கள் நாட்டையும் உங்கள் எதிர்காலத்தையும் எரிக்கிறார். பயங்கரவாதத்தை யாரும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in