

சிரியாவில் துருக்கி ராணுவ வீரர்கள், ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான போர் தொடரும் என துருக்கி சபதம் ஏற்றுள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் துருக்கிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இது குறித்து துருக்கி பிரதமர் பினலி இல்திரிம் வியாழக்கிழமை கூறும்போது, "துருக்கி பெரும் போராட்டத்துக்கு மத்தியில் உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல் துருக்கியிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் தொடரும். நாம் நமது துணிச்சலான வீரர்களை இழந்து விட்டோம். தீவிரவாதத்தை இறுதியில் நமது ஒற்றுமை வெல்லும்" என்று கூறினார்.
மேலும் துருக்கி அதிபர் எர்டோகன். "சிரியாவின் அல் பாப் பகுதி ஐஎஸ் பிடியிலிருந்து விரைவில் மீட்கப்படும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிரியாவில் ஐஎஸ் ஆதிக்க கட்டுப்பாட்டு பகுதியான அல் பாப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் துருக்கி ராணுவத்தினர் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஐஎஸ் அமைப்பு நடத்திய மூன்று தற்கொலைப்படை தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் காயமடைந்தனர்.