உலக மசாலா: பிச்சைக்காரர்களே டிஜிட்டலுக்கு மாறிட்டாங்க

உலக மசாலா: பிச்சைக்காரர்களே டிஜிட்டலுக்கு மாறிட்டாங்க
Updated on
1 min read

உலகம் முழுவதும் பிச்சை எடுப்பவர்களின் நிலை மோசமாகிக்கொண்டே வருகிறது. டிஜிட்டலுக்கு மாறிக்கொண்டிருப்பதால், பெரும்பாலானோர் கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. அதனால் பிச்சைக்காரர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவர்களால் உதவ முடிவதில்லை. கையில் பணம் வைத்திருப்பவர்கள், நாங்கள் உணவு, உடை, தங்கும் இடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக அவர்களுக்குப் பணம் அளிக்கிறோம். ஆனால் கையில் பணம் கிடைத்தவுடன் சிகரெட், போதைப் பொருள், மது போன்றவற்றுக்குச் செலவு செய்துவிடுகிறார்கள். இதனால் பணமாகக் கொடுப்பதற்கு யோசிக்கிறோம் என்கிறார்கள். பிச்சை எடுப்பவர்களின் கஷ்டத்தைப் போக்குவதற்காக ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த கார்ஸ்டென் வான் பெர்கெலும் ஸ்டீஃபன் லீண்டர்ட்சேயும் Contactless paymen jacket ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். ‘இந்த ஜாக்கெட்டில் ஒரு யூரோ செலுத்தும் அளவுக்கு ஒரு ஸ்மார்ட் கார்டை வைத்திருக்கிறோம். உதவி செய்ய நினைப்பவர்கள் தங்களது பண அட்டையை ஸ்மார்ட்கார்டில் வைக்க வேண்டும். சில நொடிகளில் உங்கள் வங்கியில் இருந்து 1 யூரோ, உதவி பெறுபவரின் வங்கிக் கணக்குக்குச் சென்றுவிடும். ஸ்மார்ட் அட்டையின் மேல் இருக்கும் எல்சிடி திரையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். இந்த ஜாக்கெட் பிச்சை எடுப்பவர்களுக்கும் வீடற்ற ஏழைகளுக்கும் உதவியாக இருக்கும். இந்தப் பண்டிகைக் காலத்தில் எங்களால் முடிந்த அளவுக்கு ஏழைகளின் முகத்தில் புன்னகையை வரவழைத்திருக்கிறோம்’ என்கிறார் கார்ஸ்டென்.

ஐயோ… பிச்சைக்காரர்களே டிஜிட்டலுக்கு மாறிட்டாங்க என்று இங்கே கிளம்பிடப் போறாங்க!

தொலைதூர உறவுகளைப் பராமரிப்பது மிகவும் சிக்கலானது. நேரிடையாகப் பார்க்க முடியாது, ஆறுதலாகக் கைகளைப் பற்ற முடியாது, தோளில் சாய்ந்துகொள்ள முடியாது. இவர்களுக்காகவே ’கிஸ்செஞ்சர்’ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அன்பானவர்களுக்கு முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தூரத்தில் இருக்கிறோம் என்ற குறை தெரியாது. சிங்கப்பூரில் வசிக்கும் AIARTL (Artificial Intelligence and Robotics Technology Laboratory) இயக்குநர் டாக்டர் ஹூமான் சமானி இதை உருவாக்கியிருக்கிறார். இரண்டு சிறிய ரோபோக்களில் சிலிக்கான் உதடுகள் பதிக்கப்பட்டு, இணையம் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஸ்மார்ட்போன்களை வைத்து, சம்பந்தப்பட்டவரைத் தொடர்புகொண்டு, சிலிக்கான் உதடுகளில் முத்தத்தைப் பதிக்க வேண்டும். கடந்த மாதம் லண்டனைச் சேர்ந்த எம்மா யான் ஸாங்கும் கிஸ்செஞ்சரை உருவாக்கினார். ஹூமான் சமானியின் கிஸ்செஞ்சர் எம்மாவின் கிஸ்செஞ்சரை விட பலவிதங்களில் மேம்பட்டதாக இருக்கிறது. ‘மெசஞ்சரில் இருந்து கிஸ்செஞ்சரை உருவாக்கினேன். காதலர்களுக்கானது என்று நினைக்க வேண்டாம். தொலைதூரத்தில் வேலை செய்யும் அப்பா, தன் குழந்தைகளுக்கு இதன் மூலம் முத்தமிடலாம்’ என்கிறார் எம்மா. இருவரின் கிஸ்செஞ்சர்களும் தற்போது பரிசோதனை முயற்சிகளில்தான் இருக்கின்றன.

அன்பைப் பரிமாறிக்கொள்ளும் கருவி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in