Published : 04 Dec 2016 10:03 AM
Last Updated : 04 Dec 2016 10:03 AM

மும்பை கடற்கரையை சுத்தம் செய்த வழக்கறிஞருக்கு ஐ.நா. விருது

மும்பை வெர்ஸோவா கடற் கரையை சுத்தம் செய்த வழக் கறிஞருக்கு ஐ.நா. சபை சார்பில் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

மும்பை வெர்ஸோவா கடற்கரை பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அப்ரோஸ் ஷா. அவரது முயற்சியால் 2.5 கி.மீ. தொலைவு கொண்ட வெர்ஸோவா கடற்கரை தற்போது தூய்மைப் பகுதியாக மாறியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறிய தாவது: ஒருநாள் எனது வீட்டின் பால்கனியில் இருந்து கடற்கரை யைப் பார்த்தேன். எங்கு பார்த்தா லும் குப்பைகூளமாக இருந்தது. பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடந்தன. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்யலாமா என்று யோசித்தேன். அந்த முயற்சி எதிர்பார்த்த பலன் அளிக்காது என்பதால் நானே களத்தில் இறங்க முடிவு செய்தேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும் எனது அண்டை வீட்டுக்காரர் மாத்தூரும் (88) சேர்ந்து வெர்ஸோவா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியைத் தொடங் கினோம். வெர்ஸோவா தன்னார்வ தொண்டர்கள் (விஆர்வி) என்ற அமைப்பை தொடங்கினோம். வாட்ஸ்அப் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டோம்.

எங்களது குழுவில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சேர்ந்து கொண்டனர். அவரவர் நேரத்துக்கு ஏற்ப தூய்மைப் பணிகள் நடைபெற்றன. 48-வது வார ஞாயிற்றுக்கிழமை எங்களது இலக்கை வெற்றிகரமாக எட்டிவிட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி மூத்த அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

வெர்ஸோவா கடற்கரை 2.5 கி.மீ. நீளம் கொண்டது. ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள், குடிநீர் பாட்டீல்கள், துணிகள், ஷூக்கள் என பல்வேறு விதமாக குப்பைகள் குவிந்து கிடந்தன.

அப்ரோஸ் ஷா மற்றும் அவரது குழுவினர் ஒவ்வொரு வாரமும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு குப்பைகளை சேகரித்தனர். அந்த குப்பைகள் லாரிகள் மூலம் மாநகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுவரை 4,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

அப்ரோஸ் ஷாவின் தூய்மைப் பணியைப் பாராட்டி ஐ.நா. சபை சார்பில் அவருக்கு ‘சாம்பியன் ஆப் எர்த்’ சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்கைம் மும்பைக்கு நேரில் வந்து அப்ரோஸுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x