தென்கொரிய அதிபர் தற்காலிக நீக்கத்தைக் கொண்டாடிய எதிர்ப்பாளர்கள்

தென்கொரிய அதிபர் தற்காலிக நீக்கத்தைக் கொண்டாடிய எதிர்ப்பாளர்கள்
Updated on
1 min read

தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஆறு மாதம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டதை வரவேற்று அவரது எதிர்ப்பாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹைக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 300 உறுப்பினர்களில் 234 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் 6 மாதங்களுக்கு பார்க் குவென் ஹை அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தென் கொரிய தலைநகர் சியோலில் இன்று (சனிக்கிழமையன்று) பார்க் குவென் ஹையின் எதிர்ப்பாளர்கள் 10,000 பேர் திரண்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை வரவேற்று பேரணி சென்றனர்.

இது குறித்து பேரணியில் கலந்து கொண்ட விவசாய சங்க உறுப்பினர் ஒருவர் கூறும்போது, ''எங்களுக்கு எதிரே நிறைய சவால்கள் உள்ளன. பார்க் குவென் ஹை முற்றிலுமாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட பின்புதான் எங்களுக்கு கிறிஸ்துமஸ்" என்றார்.

முன்னதாக அதிபர் பார்க் குவைன் ஹையின் நெருங்கிய தோழி சோய் சூன் சில் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். அதிபருடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனங்கள் பெயரில் நிதி திரட்டியதாகவும் அரசுப் பணி நியமனங்களில் தலையிட்டதாகவும் சோய் சூன் சில் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஊழல் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று அதிபர் பார்க் குவென் ஹை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மூன்று எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபருக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 3-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in